பக்கம்:கடற்கரையினிலே.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

கடற்கரையிலே



குணதிசையில் செங்கதிரோன் ஒளி வீசி எழுகின்றான். அக்காட்சியைக் கண்ட குயில்கள் பாடுகின்றன; மயில்கள் தோகை விரித்து ஆடுகின்றன. ஆடும் மயில்களின் கோலம் என் கண்ணைக் கவர்கின்றதே ! அணி அணியாக இம்மயில்கள் எல்லாம் கிழக்கு நோக்கி ஆடுகின்றனவே! அதன் கருத்தென்ன? செங்கதிர்ச் செல்வன் - ஞாலம் போற்றும் ஞாயிறு - உதிக்கும் அழகைக் கண்டு அவை குதிக்கின்றனவா?

"நீல நெடுங்கடலே ! உன் தொடுவானில் உதிக்கின்ற செஞ்சுடரைக் காணும்பொழுது, ஆடும் மயிலில் எழுந்தருளும் முருகன் திருக்கோலம் என் கண்ணெதிரே மிளிர்கின்றது. என்னை யாளும் ஐயனை - செய்யனை - செந்திற் பெருமானைப் பாடவேண்டும் என்று என் உள்ளம் துடிக்கின்றது. ஆயினும், பார்க்குமிடம் எங்கும் பரந்து நிற்கும் பரம்பொருளை எப்படித் தமியேன் பாடுவேன்? ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருஞ்சோதியை எங்ங்னம் சொல்லோவியமாக எழுதிக் காட்டுவேன்? உயிர்க் குயிராய் நின்று உலகத்தை இயக்கும் உயரிய கருணையை எவ்வாறு சொற்களால் உணர்த்துவேன்? அவன் ஆட்டுவித்தால் உலகம் ஆடும். அவனன்றி ஒர் அணுவும் அசையாது. இத்தகைய இறைவனாகிய முருகனை ஏழையேன் என் சொல்லி ஏத்துவேன்?


1. தொடு வான் - (Horizon)

2. "உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு
ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி,"

- திருமுருகாற்றுப்படை