பரணர்
17
மாறுபட்ட மன்னரைக் கீறி எறிவான்; தமிழகத்தைப் பழித்தவர் வாயைக் கிழித்திடுவான். இத்தகைய மான வீரனை மன்னனாக உடைய உனக்கு என்ன குறை?
"வளமார்ந்த துறைமுகமே ! உன் கடற்கரையில் சேர நாட்டுச் செல்வம் எல்லாம் சேர்ந்து குவிந்து சிறந்த காட்சி தருகின்றதே ! மலைவளம் உடைய சேர நாட்டுக்கு மலையாளம் என்ற பெயர் எத்துணைப் பொருத்தமாக அமைந்திருக்கின்றது? மலைசார்ந்த நாடுகள் இம் மாநிலத்தில் எத்தனையோ உள்ளன : அவை இத்தகைய சிறப்புப் பெயர் பெற்றனவா? பாரிலுள்ள மலையெல்லாம் சேரநாட்டு மலையாகுமா? எத்தனை நாடுகளில் எரிமலையிருந்து ஏக்கம் தருகின்றது ! எத்தனை நாடுகளை மலைத்தொடர் நட்ட நடுப்பெற நின்று வெட்டிப் பிரிக்கின்றது. இத்தரணியிலே தலை காய்ந்த தட்டை மலைகள் எத்தனை ! முடிசாய்ந்த மொட்டை மலைகள் எத்தனை ! இவையெல்லாம் மலையென்று சொல்லத் தகுமா? தெள்ளு தமிழ் வள்ளுவர் கூறியாங்கு 'வாய்ந்த மலை'யன்றோ நாட்டுக்கு வேண்டும்? அத்தகைய மலைக்கு ஒரு சான்றாக நிற்பது இச்சேர நாட்டு மலை. கோங்கும் வேங்கையும் ஓங்கி வளர்ந்து, ஆரமும் அகிலும் அடர்ந்து செறிந்து, மாமுகில் தவழும் வளமலையன்றோ மலையாள நாட்டு மலை? மேலைப் பெருங்கடலின் வழியாக வரும் மாரிக்காற்றைத் தலையாலே வரவேற்று மழை பொழியச் செய்யும் மலையன்றோ இந்நாட்டு மலை? இம் மலையிலே பிறந்து, முசிறிக் கடலிலே கலந்து மகிழும் பேரியாற்றின் அழகுதான் என்னே! அந் நதி திருமாலின் மார்பிலே திகழும் ஆரம் போன்றது என்று அழகுறப் பாடினாரே இளங்கோவடிகள் ! அவர் புகழ்மாலை பெற்ற பேரியாறு