18
கடற்கரையிலே
நெடுமலையைக் கடந்து, சேர நாட்டின் வழியாக நடந்து, கடலிலே பரந்து பாய்கின்ற காட்சியை இன்று கண்டேன்; கண் குளிர்ந்தேன் !
"பார் அறிந்த பெருந்துறையே ! இந்த ஆற்றங்கரையிலும், அலைகடல் ஒரத்திலும் அடுக்கடுக்காக மிளகு மூடைகள் மிடைந்து கிடக்கின்றன. கடற்கரையெங்கும் மிளகு, மணம் கமழ்கின்றது. இம் மிளகின் சுவை கண்ட மேலை நாட்டார் உன் துறைமுகத்தில் வந்து மொய்க் கின்றார்கள், சேர நாட்டாருடன் வேற்றுமையின்றிக் கலந்து வாழ்கின்றார்கள்; பண்டமாற்றுக்கு வேண்டும் அளவு இந்நாட்டு மொழியைக் கற்றுக்கொள்கின்றார்கள்; கட்டி கட்டியாகச் செம்பொன்னைக் கொண்டு வந்து கொட்டுகின்றார்கள், கப்பல் கப்பலாக மிளகை ஏற்றிச் செல்கின்றார்கள்; கருமையான மிளகு, மேலைநாட்டுச் செம்பொன்னை இந் நாட்டிற்குக் கொணர்ந்து சேர்ப்பது அருமை வாய்ந்ததன்றோ?
"கரவறியாத் துறைமுகமே ! பண்டமாற்றுச் செய்யும் முறையில் பொய்யும் புனைசுருட்டும் எந்நாளும் இந்நாட்டாரிடம் இல்லை. வாணிகம் செய்வதில் முசிறியார் ஒருபோதும் மிகைபடக் கொள்ளார்; குறைபடக் கொடார். குட்டநாட்டில் விளையும் மிளகு, மேலைநாட்டு யவனர்க்கு மெத்த இனிய பொருள். அதைக் கண்டால் அன்னார் கொட்டமடித்து வாரிக்கொள்கின்றார்கள்; கேட்ட விலையைக் கொடுக்கின்றார்கள். அந்த மிளகிலே அவ்வளவு தேட்டம் ! ஆயினும், வெள்ளையர் நாவில் குட்ட நாடு என்ற சொல் திட்ட வட்டமாக வருவதில்லை. அதைக் " கொத்தநாரு" என்று. சொத்தையாகச் சொல்லுவர். தென் மொழியில் உள்ள