பக்கம்:கடற்கரையினிலே.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாத்தனார்

21


ஏந்தல் அவனே இமயமலையிலே புலிக்கொடியேற்றிய புரவலன் அவனே; ஈழ நாட்டைச் சோழ நாட்டோடு இணைத்த வீரன் அவனே. இங்ங்னம் திக்கெல்லாம் புகழ் பெற்று விளங்கிய திருமாவளவன் உன் அருமையும் பெருமையும் அறிந்தான்; காவிரி நாட்டுக்கு நீயே உயிர் என்பதை உணர்ந்தான்; கண்ணினைக் காக்கின்ற இமைபோல் உன் நலத்தினைக் காக்க முற்பட்டான். மன்னவனே முன்னின்றால் முடியாத தொன்று உண்டோ? அன்று முதல் நீயே சோழநாட்டின் தலைநகரம் ஆயினாய் ! அளவிறந்த பொன்னும் பொருளும் செலவிட்டு உன்னைப் புதுக்கினான் அம்மாநில மன்னன். காவிரியின் வண்டல் படிந்து தூர்ந்திருந்த உன் துறைமுகத்தைத் திருத்தினான்; பெருக்கினான்; ஆழமாக்கினான். அதனால் 'கயவாய் என்ற பெயர் இத் துறைமுகத்திற்கு அமைந்தது. தட்டுத் தடையின்றி எட்டுத் திசையினின்றும் வணிகர் இங்குக் குடியேறி வாழத் தலைப்பட்டார். வந்தவர்க்கெல்லாம் நீ வீடு தந்தாய். நிற வேற்றுமையையும் பிற வேற்றுமையையும் பாராது வஞ்சமற்ற மாந்தரையெல்லாம் நீ வரவேற்றாய். சீனகரும் சோனகரும் உன் கயவாயின் அருகே மணிமாட மாளிகை கட்டி வாழ்வாராயினர். இவ்வழகிய கடற்கரையிலே தாழைவேலி சூழ்ந்த ஏழடுக்கு மாடங்கள் எத்தனை ! கண்டோர் வியப்புற வானளாவி நிற்கு பண்டசாலைகள் எத்தனை !


1. " கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்

பயனறவு அறியா யவனர் இருக்கையும்"

- சிலப்பதிகாரம் : இந்திர விழவூரெடுத்த காதை