22
கடற்கரையிலே
“பூம்புகார்த் துறையே ! அல்லும் பகலும் நின் அருமைத் துறைமுகத்தை நோக்கிக் கப்பல்கள் நீந்தி வரும் காட்சியைக் கண்டு கண்குளிர்ந்தேன். அந்தி மாலை, வந்தெய்து முன்னரே கடற்கரையெங்கும் தீ நா விளக்குகள் திகழ்கின்றன. துறைமுகத்தின் அருகே ஓங்கி உயர்ந்த கலங்கரை விளக்கம் காட்சி தருகின்றது. 'கலங்கரை விளக்கம்' என்ற சொல்லின் அழகுதான் என்னே ! 'கருங்கடலில் நீந்தி வரும் கப்பல்களை நெறிகாட்டி அழைக்கும் விளக்கு' என்ற அருமையான பொருளை யுடையதன்றோ அச்சொல் ! 'தன்னை நோக்கித் தவழ்ந்து வரும் குழந்தையை முகமலர்ந்து, கை நீட்டி அழைக்கும் தாய்போல, இருட்டிலே கருங்கடலில் மிதந்து வரும் கப்பல்களை ஒளிக் கரத்தால் வரவழைக்கும் விளக்கு' என்ற அழகிய கருத்தன்றோ அச்சொல்லில் அமைந்திருக்கின்றது? கடற்கரையில் உள்ள அவ்விளக்கைக் காண்பது கண்ணுக்கு இன்பம். அதன் பெயரைக் கேட்பது காதுக்கு இன்பம். இவ்விருவகை இன்பத்தையும் நுகர்ந்தன்றோ இளங்கோவடிகள் 'இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கம்' என்று உளங்குளிர்ந்து பாடினார்? அவர் ஆசை பற்றிப் பாடிய பாட்டின் ஒசை நயம் உணராத செவி என்ன செவியே !
"வளமார்ந்த துறைமுகமே ! இந்நானிலத்தில் உள்ள நானாவிதப் பொருள்களும் நீரின் வழியாகவும், நிலத்தின் வழியாகவும் உன் 'அங்காடியில் வந்து நிறைகின்றனவே! வடமலையிற் பிறந்த பொன்னும் மணியும், குடமலையிற் பிறந்த ஆரமும் அகிலும், தென்கடல் முத்தும், குணகடற் பவளமும், சேரநாட்டு மிளகும், சோழநாட்டு நெல்லும்,
1. அங்காடி - பசார் (Bazaar)