பக்கம்:கடற்கரையினிலே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புனிதவதி

25


அலைகளோடு உறவாடினேன்; இளங்காற்றை நுகர்ந்து இன்புற்றேன்; உன் துறைமுகத்தில் கப்பல்களைக் கண்டு களிப்புற்றேன்.

"கரை காணாக் கருங்கடலே! ஆயினும் இப்பொழுது உன்னைக் கண்டு அஞ்சுகின்றது என் நெஞ்சம். ஆற்றாமையால் அலமருகின்றது என் உள்ளம். 'என் கணவர் - மாசற்ற மணாளர் - வாணிகம் செய்து வருவேன் என்று சொல்லி உன்துறைமுகத்தில் வங்கமேறிச் சென்றார்; 'நெடுநிதி கொணர்வேன்' என்று நெடுங்கட லோடினார். ஆண்டு பல சென்றன. அவர் எங்குள்ளார் என்று அறியாது பாவியேன் ஏங்கித் தவிக்கின்றேன். அவர் ஏறிச் சென்ற கப்பல் என்னாயிற்றோ? இதுகாறும் அவர் வாராத காரணந்தான் யாதோ !” என்று எண்ணாத எண்ண மெல்லாம் எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம் புண்ணாகின்றதே !

"நேச நெடுங் கடலே ! என் கணவர் சென்ற வழியே விழிவைத்து எத்தனை மாதமாகக் காத்திருக்கின்றேன் ! வருகின்ற கப்பலையெல்லாம் வாஞ்சையோடு நோக்குகின்றேன். அந்தோ ! ஒவ்வொரு நாளும் நான் படும் துயரத்தை யாரிடம் சொல்வேன்? கொண்ட கணவர்க்குத் தொண்டு செய்யும் உரிமை இழந்தேன்; தொல்லை வினையால் துயர் உழந்தேன்.

"அருமை சான்ற ஆழியே! உன்னையே தஞ்சமாக அடைந்தேன். வஞ்சம் ஒன்றும் அறியாத என் கணவர் வாழுமிடத்தைக் காட்டாயா? அஞ்சேல் என்று அருள் செய்ய மாட்டாயா? முந்நீர் கடந்துவரும் மெல்விய காற்றே ! நீயேனும் ஒரு மாற்றம் உரையாயோ? பன்னாள் உன்னோடு பழகினேனே ! அப்பான்மையை மறக்கலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/27&oldid=1248535" இலிருந்து மீள்விக்கப்பட்டது