உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடற்கரையினிலே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கடற்கரையிலே


நட்டாரைக் கைவிடுதல் நன்றாகுமா? ஐயோ! ஓர் உயிருக்கு நான் தீங்கு நினைத்தறியேன். எனக்கு ஏன் இந்த இடர் வந்தது?

"அறவாழி அந்தணனே! நின்னை அறக்கடல் என்று ஆன்றோர் பாடினரே; அருட்கடல் என்று அறிந்தோர் போற்றினரே. இக்காரைக் கடலினும் பெரிதன்றோ நின் கருணைக்கடல்? கங்கு கரையின்றி எங்கும் நிறைந்த கருணையங் கடல் நீயே யன்றோ? மன்னுயிரை யெல்லாம் காத்தளிக்கும் அருங் கருணையால் அன்றோ அந்நாள் கடலினின்று எழுந்த பெருநஞ்சை அள்ளி உண்டாய்? கண்டம் கறுத்தாய்; நீலகண்டன் என்ற பெயர் பெற்றாய். அண்டத்தை யெல்லாம் காக்கின்ற அருளின் அடையாள மன்றோ நின் கண்டத்தின் கருமை; அக்கருமையின் பெருமையை நினைத்து அடியேன் உருகுகின்றேனே !

"பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறம்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்பது இடர்."

"எம்பெருமானே ! நான் அறிவறிந்த கால முதல் நின்னை நினையாத நாள் உண்டோ? அன்பு மொழிகளால் வாழ்த்தாத நாள் உண்டோ? அடங்கிப் பணிந்து வணங்காத நாள் உண்டோ? என்றும் நின் திருவடியே சரணமெனக் கொண்டேன். எல்லாம் உன் செயலே என்றுணர்ந்தேன். இவ்வாறு வளர்ந்து வந்த என்னை நீயே இல்லறத்தில் உய்த்தாய்; நாகையில் உள்ள நல்லார் ஒருவருக்கு இல்லாளாய் இருக்க வைத்தாய்; இல்லறத்தில் பொருத்திய நீயே பின்பு என் கணவரைப் பிரித்து விட்டாயே! ஐயனே ! இதுவும் உன் திருவிளையாட்டோ:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/28&oldid=1248536" இலிருந்து மீள்விக்கப்பட்டது