உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடற்கரையினிலே.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமங்கை மன்னன்

35


மனக்கவலையை மாற்றுவதாக வாக்களித்தான். அதன் பொருட்டு உன் துறைமுகத்தினின்று புறப்பட்டது தமிழ்ச் சேனை; மாற்றாருடன் போர் புரிந்தது; வெற்றி பெற்றது. மானவர்மன் இலங்கைக்கு அரசன் ஆயினான். அவன் மானங்காத்த பெருமை உனக்கும் உரியதன்றோ?

"நல்வாழ்வு பெற்ற மல்லை நகரமே ! இலங்கையில் வெற்றிமாலை சூடிய பெரும்படை வீர முழக்கத்துடன், 'மல்லன் வாழ்க, வாழ்க’ என்று வாழ்த்திக்கொண்டு, மரக்கலங்களில் இங்கு வந்த காட்சியைக் கண்டவர் மறப்பாரோ? ¹பொன்னையும், மணியையும், பொருளையும், போர்க்களிறுகளையும் சுமந்து நெளிந்து உன் துறைமுகத்தை நண்ணிய கப்பல்களின் மாட்சி சொல்லுந் தன்மையதோ? இவையெல்லாம் மல்லையங் கரையிலே பள்ளிகொண்ட மாதவன் செயலன்றோ?

"மன்னர் போற்றும் மணிநகரே ! வெற்றி மேல் வெற்றி பெற்ற மாமல்லன் உன்னை அழகு செய்யத் தலைப்பட்டான்; உன் கரும்பாறைகளையெல்லாம் கலைக்கோயிலாக்கக் கருதினான். அவன் ஆணை தலைக்கொண்டு கற்பணியில் வல்ல சிற்பியர் கைசெய்யத்


1. "புலங்கொள்நிதிக் குவையோடு

புழைக்கைம்மாக் களிற்றினமும்
நலங்கொள்.நவ மணிக்குவையும்
சுமந்தெங்கும் நான்றொசிந்து
கலங்கள் இயங் கும்மல்லைக்
கடல்மல்லைத் தலசயனம்
வலங்கொள்மனத் தாரவரை
வலங்கொள்என் மடநெஞ்சே."

- திருமங்கை மன்னன் திருப்பாசுரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/37&oldid=1248483" இலிருந்து மீள்விக்கப்பட்டது