பக்கம்:கடற்கரையினிலே.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமங்கை மன்னன்

37


தரும் மாண்பும் அக்கல்லில் அமைந்து இனிய காட்சி தருகின்றனவே ! அதன் மருங்கிலுள்ள பாறையிலே அருந்தவத்தின் கோலம் இலங்குகின்றது. ஒற்றைக் காலை ஊன்றி, உச்சிமேற் கைகூப்பி, வற்றிய மேனியனாய், நற்றவம் புரியும் ஒரு மாதவன் வடிவம் அழகாக அக்கல்லில் வடிக்கப்பட்டிருக்கின்றது. அவனது அருந்தவத்தின் செம்மையால் சுற்றும் முற்றும் அமைதியே நிலவுகின்றது. எத்தனை கலைவாணர் கருத்து இக்கற்பனையில் அமைந்துள்ளதோ? -

"நல்லோர் ஏத்தும் மல்லை மாநகரமே ! உன்னைக் காணப் பெற்றோர் வெம்மை நீத்துச் செம்மை யடைவர்; பிணக்கம் ஒழித்து இணக்கம் எய்துவர். உன் கடற்கரைக் கோயிலிலே கண்ணுதலோனும் கமலக்கண்ணனும் இணங்கி நின்று இன்பக் காட்சி தருகின்றனர். இதைக் கண்டும் இவ்வுலகம் பிணக்க நெறியிற் செல்லுதல் பேதைமையன்றோ? -

"பிணங்களிடு காடதனுள்
நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்குதிருச் சக்கரத்தெம்
பெருமானார்க் கிடம்விசும்பில்
கணங்கள்இயங் கும்மல்லை
கடல்மல்லைத் தலசயனம்
வணங்குமனத் தாரவரை
வணங்குஎன்தன் மடநெஞ்சே"

என்று உருக்கமாகப் பாடிக்கொண்டு திருக்கோயிலின் உள்ளே சென்றார் திருமங்கையாழ்வார்.