9. பட்டினத்தார்
சென்னை மாநகரின் அருகேயுள்ள கடற்கரையூர்களிலே சாலத் தொன்மை வாய்ந்தது திருஒற்றியூர் மூவர் தமிழும் பெற்றது அம்மூதூர். பட்டினத்தார் என்று தமிழகம் போற்றும் பெரியார் அப்பதியிலே பல நாள் வாழ்ந்தார். அவரை நன்றாகப் பற்றிக்கொண்டது ஒற்றியூர் தமது உள்ளங் கவர்ந்த ஒற்றியூர்க் கடற்கரையிலே நின்று ஒரு நாள் அவர் உயரிய உண்மைகளை உணர்த்தலுற்றார்:
"கற்றவர் போற்றும் ஒற்றி மாநகரே ! உன்னை நாடியடையாதார் இந்நாட்டில் உண்டோ? உன் கடலருகே நிற்கும் கரும்பைக் கண் படைத்தவர் காணாதிருப்பாரோ? அக்கரும்பின் தன்மையை என்னென்று உரைப்பேன்? காண இனியது அக்கரும்பு; கண் மூன்றுடையது அக்கரும்பு; *கண்டங் கருத்தது அக்கரும்பு; தொண்டர்க்கு உகந்தது அக்கரும்பு. கண்டுகொண்டேன் அக்கரும்பை ! அக்கரும்பே என் கடுவினைக்கு மாமருந்து.
- "கண்டம் கரியதாய், கண்மூன் றுடையதாய்
அண்டத்தைப் போல அழகியதாய் - தொண்டர்
உடல்உருகத் தித்திக்கும் ஒங்குபுகழ் ஒற்றிக்
கடல்அருகே நிற்கும் கரும்பு"
- பட்டினத்தார் பாடல்.