பக்கம்:கடற்கரையினிலே.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கடற்கரையிலே


உணர்வினை அருள்வாய்' என்று அவர் அருளிய திருவாக்கே எனக்கு வழிகாட்டுகின்றது. வாழ்க்கை என்னும் கடலில் ஒடும் உயிருக்கு இதனினும் சிறந்த உறுதி யுண்டோ? மனத்திலே சீலம் என்னும் சரக்கை ஏற்றாது, சினம் என்னும் சரக்கை ஏற்றுதல் ஈனம் அன்றோ? அச்சரக்கை ஏற்றிச் செல்லும்போது, செருக்கென்னும் பாறை தாக்கி நொறுக்கிவிடும் என்று அப்பர் கூறியது அமுதவாக்கன்றோ? யான், எனது என்னும் இருவகைச் செருக்கும் அற்றவரே பிறவிப் பெருங்கடல் கடந்து பேரின்ப உலகம் பெறுவர் என்று தமிழ்மறை, பாடிற்றன்றோ? வாழ்க்கையை உருப்பட வொட்டாமல் சிதைத்து அழிக்கும் செருக்கை 'மதன் என்னும் பாறை' என்று அப்பர் பெருமான் பாடிய அருமையை எவ்வாறு புகழ்ந்து உரைப்பேன்!

"நீர்ப்பெருக்குற்ற நெடுங்கடலே ! செல்வச் செருக்கே செருக்கினுள் எல்லாம் தலையாகும். உலக வாழ்க்கை செம்மையாக நடைபெறுவதற்குச் செல்வம் இன்றியமை யாததுதான். 'பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை' என்பது பொய்யாமொழியே. ஆயினும், செல்வத்தின் பயனறிந்து வாழ்பவர் இவ்வுலகில் ஒரு சிலரேயாவர். அல்லும் பகலும் அரும்பாடு பட்டுத் தேடும் பணத்தை மண்ணிலே புதைத்து வைத்து மாண்டு ஒழிபவர் எத்தனை பேர் ! பரிந்து தேடும் பணத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்வதே பேரின்பம் என எண்ணி வாழும் ஏழை மாந்தர் எத்தனை பேர் ! செல்வம் என்பது செல்லுந் தன்மைத்து என்ற உண்மையை அறியாது அதைக் கட்டி வைத்துக் காக்க முயலும் கயவர் எத்தனை பேர் ! செல்வம் பெற்றவர் தம் நிலையைக் குறித்துச் சிறிதும் சிந்திக்கின்றார்