பக்கம்:கடற்கரையினிலே.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டினத்தார்

41


இல்லையே ! பிறக்கும்பொழுது தங்கத் தலையொடும், வயிரக் கையொடும், வெள்ளிக் காலொடும் பிறந்தவர் எவரும் இல்லையே! இறக்கும்பொழுது பொன்னையும் பொருளையும் தம்முடன் கொண்டுசெல்வார் எவரும் இலரே ! இத்தகைய செல்வத்தின் பயன்தான் யாது? உலகியல் அறிந்த பெரியோரெல்லாம் ஒருதலையாக அதனை உணர்த்தியுள்ளார்களே ! 'ஈதலே செல்வத்தின் பயன்; அற்றாரை ஆதரித்தலே செல்வம் பெற்றாரது கடமை'. இதை அறிந்து வாழ்பவர் ஆன்றோர் ஆவர்; கொடுக்க அறியாதவர் *குலாமர்; பிறவிப்பயன் அறியாப் பதடிகள். -

"பரந்த பெருங்கடலே ! பசித்தோர் முகம் பார்த்து இரங்கும் தன்மை வாய்ந்த செல்வர் இல்லாத நாடு நாடாகுமா? ஏழையர்க்கு ஒன்றும் ஈயாது ஏழடுக்கு மாடம் கட்டி இறுமாந்திருப்பவர் இறைவனது கருத்தறியாத ஈனர் அல்லரோ? மெய்யறிவு பெற்ற மேலோர் எல்லாம் மெய்ப்பொருளாகிய இறைவனை 'ஏழை பங்காளன்' என்று குறித்தனரேயன்றிச் செல்வர் பங்காளன் என்று சிறப்பிக்கவில்லையே! இத்தகைய ஏழையரைப் புறக்கணிப்பது ஆண்டவனைப் புறக்கணிப்பதாகுமன்றோ?


  • " பிறக்கும் பொழுது கொடுவந்த
தில்லை ! பிறந்து மண்மேல்

இறக்கும் பொழுது கொடுபோவ

தில்லை; இடைநடுவில்

குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த

தென்று கொடுக்கறியாது

இறக்கும் குலாமருக்குஎன்

சொல்லுவேன் கச்சி ஏகம்பனே"

- பட்டினத்தார் பாடல்