பக்கம்:கடற்கரையினிலே.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டித சோழன்

47


"வாகை சூடிய நாகையே ! இன்று கடாரத்தை ஆளும் அரசன் அந்நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள பண்டை உறவை மறந்தான்; புத்த விகாரத்தை நாம் ஆதரித்த அருமையையும் புறக்கணித்தான். சித்த விகாரத்தால் சீனத்தாரோடு புத்துறவு பூண்டான். அவ்வர்த்தக உறவினால் கடாரத்திலுள்ள தமிழர் கையற்றார். தமிழகத்திற்கும் வாணிக வளம் சிறிது குறைவதாயிற்று. முறை தவறி நடந்த கடார மன்னர்க்குத் தமிழாற்றலை அறிவித்தற்காகவே நமது கடற்படை எழுந்தது; கடாரம் கிடுகிடுத்தது; குற்றமுள்ள மன்னவன் நெஞ்சு குறுகுறுத்தது. அவன் நமது அடியில் முடியை வைத்து வணங்கினான்; பிழை பொறுக்கும்படி வேண்டினான்; முறையாகத் திறை செலுத்த இசைந்தான்; 'இனி என்றும் தமிழ்நாட்டின் நலத்திற்கு மாறாக நடப்பதில்லை' என்று வாக்களித்தான். வடுப்படாமல் வாகைமாலை சூடிய தமிழ்ச்சேனை இந்நாகைத் துறை முகத்தில் வந்து இறங்கியபொழுது இங்கெழுந்த எக்களிப்பை என்னென்றுரைப்பேன் ! 'கங்கை கொண்ட தமிழரசன் கடாரமும் கொண்டான்' என்று கவிஞர் கொண்டாடினார்கள்; பாட்டாலும் உரையாலும் என் படைத் திறமையைப் பாராட்டினார்கள். அப்பாராட்டெல்லாம் என் குடிபடைகளுக்கே உரியவாகும். ஒன்றை மட்டும் நான் ஒப்புக்கொள்வேன். கங்கை கொண்டதனால் கழனி கண்டேன்; கடாரம் கொண்டதனால் கடல் வளம் பெற்றேன். இனி என் நாட்டுக்கு என்ன குறை?

“தகைமை வாய்ந்த திருநகரே ! திருவள்ளுவர் கூறியவாறு தள்ளா விளையுளும், தாழ்விலாச் செல்வமும் உடைய தமிழ்நாட்டில் தக்காரும் வாழ்வதறிந்து மனம்