48
கடற்கரையிலே
தழைக்கின்றேன். தஞ்சை மாநகரில் என் தந்தையார் எடுத்த திருப்பணி இனிது நிறைவேற உறுதுணையாக நின்றவர் கருவூர்த் தேவர் என்பதை நாடறியும். அவர் மும்மையும் உணர்பவர்; ஒருமையே மொழிபவர். அவர் ஆசியால் நான் வாசி பெற்றேன். கங்காபுரி என்னும் கங்கை கொண்டசோழபுரத்தில் ஈசனார்க்கு நான் எடுத்த திருக்கோயிலைக் கருவூர்ப் பெரியார் பாடியருளினார். அவர் பாடிய இசைப்பாட்டால் என் பெயர் தாங்கிய நகரின் புகழ் எட்டுத் திசையிலும் பரவலாயிற்று. அம்மட்டோ? அருள் நூலும், பொருள் நூலும் அவர் வாயிலாகக் கேட்டறிந்த என்னைப் 'பண்டித சோழன்' என்று தமிழகம் பாராட்டத் தொடங்கிற்று. அப்பட்டத்தைத் தாங்குதற்குரிய தகுதியில்லையே என்று ஏங்குகின்றது என்னுள்ளம்.
"கற்றவர் நிறைந்த நற்றவ நகரே ! கடல் நாகையாகிய நீ, கலை நாகையாகவும் விளங்குகின்றாய் ! இங்குள்ள கலைவாணர் உதவியால் அருந்தமிழ்க் கலைகளை ஒதியுணர்ந்து நான் பண்டித சோழன் ஆக முயல்வேன். மெய்ஞ்ஞான பண்டிதனாகிய முருகவேள் அருளால் முத்தமிழறிந்து வாழ்வேன். எல்லோரும் இன்புற்று வாழ ஈசன் அருள் புரிக' என்று பணிந்து விடைகொண்டான், பண்டித சோழன்.