பக்கம்:கடற்கரையினிலே.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டி மன்னன்

51



"தகை சான்ற தனிநகரே ! தக்கோர் வாழும் நாடு தமிழ்நாடு என்று அறிவின்மிக்கோர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அதன் உண்மையை இன்று அறிந்தேன். தமிழ் நாட்டு வள்ளல், காலத்தில் உதவி செய்து நம்மைக் காப்பாற்றினார். கருணையே உருவாகிய அப்பெருமானுக்கு என்ன கைம்மாறு செய்ய வல்லோம்? உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவ ரல்லரோ? உயிர் தந்த ஒருவனை, 'அம்மையே. அப்பா, ஒப்பிலா மணியே', என்று நாம் எந்நாளும் போற்றுவோம். அவ்வள்ளலார் குலம் வாழையடி வாழை போல் நீடுழி வாழ்க என்று வாழ்த்துவோம். அவர் நாட்டிலுள்ள காவிரியாறு இன்று போலவே என்றும் வளமுறத் திகழும் வண்ணம் ஆண்டவன் திருவருளை வேண்டுவோம்.

"அருள் பூத்த தமிழ் நகரே ! காவிரி நாட்டின் கண்ணெனத் திகழும் தில்லையம்பதியிலே எம்மையாளுடைய ஈசன் - மும்மைசால் உலகுக்கெல்லாம் முதல்வன் - ஆனந்தக் கூத்தாடுகின்றான். அப்பெருமான் ஆடுகின்ற அம்பலத்தை 'அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்' என்று ஆன்றோர் பாடினர். காவிரியாற்றின் நடுவே கருணை மாமுகிலாகிய திருமால் ஆனந்தமாய்க் கண்வளர்கின்றார். அவர் பள்ளி கொள்வதற்கு என்ன தடை? நாடு செழித்திருக்கின்றது; அறம் தழைத்திருக்கின்றது; எல்லோரும் இன்புற்று வாழ்கின்றார்கள். ஆதலால், காக்கும் கடமையுடைய பெருமாள் கவலையற்றுத் திருவரங்கத்திலே கண் வளர்கின்றார். காவிரி நாட்டிலுள்ள அமைதியைக் காட்டுகின்றது அவர் திருக்கோலம். எனவே, ஆனந்தக் கூத்துக்கும் ஆனந்த சயனத்துக்கும் அடிப்படையான காரணம் சோழ நாட்டின்