உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடற்கரையினிலே.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கடற்கரையிலே


இல்லை' என்று மிஞ்சி அறைகின்றார்களே! உன் துணையுடைமையாலன்றோ இப்படித் துள்ளுகின்றார்கள்?

"அறுப் பெருங்கடலே! அரக்கர் வேந்தன் மறக்களவேள்லி செய்பவன் என்பதை நீ மறந்தனையோ? பஞ்சவடிச் சோலையில் அவன் செய்த பாதகச் செயலை நீ அறியாயோ? மாமற்ற சீதையை நெஞ்சார வஞ்சித்துக் கவர்ந்தானே அந்நிருதர் வேந்தன் ! தன்னந் தனியளாய்த் தவச்சாலையில் இருந்த கற்பின் செல்வியை எடுத்துச் சென்று சிறைச்சாலையில் வைத்த அவன் சிறுமையை நீ அறியாயோ? அசோக வனத்தில் சோகமே வடிவாயமைந்த அம்மங்கை, கணவனைத் திக்கு நோக்கித் தொழுவதும், வித்தி விம்ம? அழுவதும் மக்கி மடிந்து விழுவதும் கண்டு இரக்கமற்ற அரக்கியரும் தளர்ந்து ஏங்குகின்றார்களே ! அவள் வடிக்கும் கண்ணீர் இலங்கைக் கோட்டையை இடித்து நொறுக்காமல் விடுமோ? “அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்" என்பது ஆன்றோர் மொழியன்றோ ?

"அலைகடலே! அம்மங்கையின் கணவன் செங்கமலக்கண்ணன் - வெஞ்சிலை வீரன், இதோ! உன் கரையில் வந்து நிற்கின்றான். அவன் பெருமையை அறிந்து தான் முன்னிலும் அதிகமாய் முழங்குகின்றாயோ? சீதநீர்த் துளிகளைத் திரைக்கரத்தால் எடுத்து அவன் திருவடியில் தெவிக்கின்றாயோ? கோமகன் வந்தான் என்று! குதிக்கின்றாய் போலும்! ஐயோ! அவ்வண்ணலின் நிலையை நீ அறிந்தாய் அல்லையே! ஆழி சூழ் உலகமெல்லாம் அரசாளும் உரிமை துறந்து, பூழி வெங்கானம் போந்த புண்ணியன் அவன்; கானகத்தில் கற்புடை மனையாளைப் பறி கொடுத்துக் கடுந்துயர் இழந்த காதலன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/58&oldid=1248499" இலிருந்து மீள்விக்கப்பட்டது