பக்கம்:கடற்கரையினிலே.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர்

57


மானம் அவன் மனத்தை அறுக்கின்றது. அரக்கர் நகரில் சிறைப்பட்ட சீதையின் சோகம் அவன் உள்ளத்தை உருக்குகின்றது; தூது சென்ற அனுமனிடம் அவள் சொல்லியனுப்பிய செய்தியை நினைந்து நினைந்து நெஞ்சம் துடிக்கின்றான் அவன்; அவள் குறிப்பிட்ட கால அவதி நெருங்குகின்றதே என்று மறுக்கம் உறுகின்றான்; காடும் மலையும் கடந்து வருகையில் சால நாள் கழிந்ததே என்று கவலைப்படுகின்றான்.

"மறிகடலே ! நிலப்பரப்பின் எல்லை கண்ட வீரன் இப்போது நீர்ப்பரப்பின் தொல்லை கண்டு துளங்குகின்றான்; உறக்கம் நீத்த கண்களோடு உன்னைப் பார்க்கின்றானே !* உன்னை நோக்கி அவலமே வடிவமாக நிற்கும் அண்ணலை மணிவண்ணன் என்பார்கள்; தாமரைக் கண்ணன் என்பார்கள். ஆயினும், மனத்துயரால் மணிவண்ணத்தின் ஒளி மழுங்கிவிட்டதே ! இரவும் பகலும் உறங்காத கண்கள் செங்கமலத்தின் செவ்வியிழந்தனவே ! அவன் அகத்தில் அடங்கிய ஆறாத் துயரம் முகத்தில் நன்றாய்த் தெரிகின்றதே ! துங்காத கண்களில் இன்னும் துலக்கமாகத் தோன்றுகின்றதே !


★"பொங்கிப் பரந்த பெருஞ்சேனை

புறத்தும் அகத்தும் புடைசுற்றச்

சங்கிற் பொலிந்த கையாளைப்

பிரிந்த பின்பு தமக்கினமாம்

கொங்கிற் பொலிந்த தாமரையின்

குழுவும் துயில்வுற்று இதழ்குவிக்கும்

கங்குற் பொழுதும் துயிலாத

கண்ணன் கடலைக் கண்ணுற்றான்."

- கம்பராமாயணம் - கடல் காண் படலம்