பக்கம்:கடற்கரையினிலே.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர்

59


"முல்லையும் கடல்முத்தும் எதிர்ப்பினும்
வெல்லும் வெண்ண கையாய் !"

என்று ஐயன் சொல்லியதை இங்கு நினைப்பூட்டி எல்லையற்ற இடர் தந்தாயே !இப்பொழுது அவ்வீரன் மனம் முறுகி நிற்கின்றது; வீணாகக் காலம் கழிகின்றதே என்ற விறுவிறுப்பு எழுகின்றது; பரபரப்புண்டாகிறது. வரை கடந்த சீற்றத்தால் அவன் வரிசிலை யெடுத்து வளைப்பானாயின் இவ்வுலகம் என்னாகும்? சரமாரியால் சராசரமெல்லாம் சாம்பராய் விடுமே !

"நித்திலம் விளைக்கும் நெடுங்கடலே ! உன் முகத்தைக் கண்டு பெருங் கோபமும் தாபமும் பிறந்தாலும் அவற்றை அடக்கும் திறம் உடையவன் அவ்வீரன்; செம்மை சான்ற நெறி திறம்பி, ஒருபோதும் வெம்மை விளைக்க அவன் ஒருப்பட மாட்டான். 'பொறுத்தார் பூமியாள்வார். பொங்கினார் காடாள்வார்' என்னும் முதுமொழியின் உண்மையறிந்து வாழ்பவன் அவன்; 'என்றும் அறம் வெல்லும்; பாவம் தோற்கும்' என்ற கொள்கையை நன்றாக மனத்திற் கொண்டவன்; அரக்கர் செய்த தீமைக்காக அனைத்துலகையும் ஒழிக்க ஒருபோதும் கருதமாட்டான். இத்தகைய வீரனுக்குத் துணை புரிதலன்றோ உனக்குப் பெருமை தரும்? காலத்திற் செய்த நன்றி சிறிதெனினும், அது ஞாலத்தின் மாணப் பெரிது என்பது பொய்யாமொழி யன்றோ? அறவோரை ஆதரிக்கும் ஆழியே, வாழி ! அல்லோரை அழித்தொழிக்கும் ஆழியே, வாழி !" என்று வாழ்த்தி வணங்கினார் கவிஞர்.