பக்கம்:கடற்கரையினிலே.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயுமானவர்

63


நிலையே ஞான நிலை என்றும் காட்டும் மாதவர் மலிந்த நாடு அனுபவ ஞானம் பெற்ற ஆன்றோர் வாழும் நாடு. இந்நாட்டிலே அனுபூதிச் செல்வராய் விளங்கிய அருணகிரிநாதரை அறியாதார் உளரோ? இவர் அருளிய 'கந்தர் அனுபூதி' செந்தமிழ் நாட்டார் போற்றும் ஞானக் களஞ்சியம். அந்த அனுபூதியிலே மிளிர்கின்றது ஒர் அருமையான வாசகம் :

"ஆசா நிகளம் துகள்ஆ யினபின்
பேசா அனுபூ திபிறந் ததுவே"

என்ற வாசகத்தைப் படித்தேன்; சிந்தித்தேன்; தெளிந்தேன். அரியவற்றுள் எல்லாம் அரிது என்று ஆன்றோர் பலரும் அறிவுறுத்திய அனுபூதிச் செல்வம் பெற்ற அருணகிரி நாதரை மனமாரப் போற்றினேன்; அப்பெருமானை ஞானத் தந்தையாகக் கொண்டேன். 'ஐயா! அருணகிரி அப்பா ! உன்னைப்போல், மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்?' என்று விம்மிதமுற்று நின்றேன்.

"பழங்கடலே ! பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிற்கும் பரம்பொருளையே நாடுகின்றது என் நெஞ்சம். பேச்சற்ற நிலையே பேரின்ப நிலை யென்று அறிகின்றது என் உள்ளம். தன்னேரில்லாத் தலைவனைத் தர்க்கமிட்டுக் காண முடியுமோ?

"தர்க்க மிட்டுப் பாழாம்
சமய குதர்க்கம் விட்டு
நிற்கும் அவர்கண் டவழி
நேர்பெறு வதுஎந் நாளோ?"

என்று பாடிக்கொண்டே கடற்கரையை விட்டகன்றார் தாயுமானவர்.


★ தாயுமானவர் பாடல்