பக்கம்:கடற்கரையினிலே.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மார்க்கப் போலர்

65


கண்டறிந்தேன். துறைமுக நகரமாய் விளங்கும் நீயே பாண்டி நாட்டிற்கு ஏற்றமும் தோற்றமும் தருகின்றாய்; வாணிக வளத்தின் உறைவிடமாய்த் திகழ்கின்றாய். உன் துறைமுகத்திலே கலங்கள் இயங்கும் காட்சியைக் கண்டு இன்புறுகின்றேன்.

"முத்தம் தரும் முந்நீர்த் துறையே ! தென்னாட்டு முத்து எந்நாட்டிலும் சென்று ஏற்றமுற்று விளங்குவதை நான் அறிவேன். ஆயினும், முத்துச் சலாபத்தை முதன் முதலாக இன்றுதான் கண்டேன். இளவேனிற் காலமே முத்துக் குளிக்கின்ற காலம். அப்பணியில் நன்றாகப் பழகியவர் பாண்டி நாட்டுப் பரதவர். அன்னார் சலாபத் துறையிற் போந்து சலிப்பின்றிப் பணி செய்வதைப் பார்த்தேன். இடுப்பிலே வலைப்பையை இறுக்கிக் கொண்டு, காலிலே கல்லைக் கட்டிக்கொண்டு, படகின் நெடுங்கயிற்றைப் பற்றிக்கொண்டு அவர் கடலின் உள்ளே இறங்குவர். நொடிப்பொழுதிலே கடலடியிற் போந்து, அகப்பட்ட முத்துச் சிப்பிகளை அள்ளிப் பையிலே போடுவர்; மூச்சு முட்டும் வேளை கிட்டியவுடன், காலில் உள்ள கல்லைக் கடலடியிற் கழற்றிவிட்டுக் கயிற்றை அசைப்பர். அப்போது படகின்மீது கண்ணும் கருத்துமாய் நிற்கும் பரதவர் கயிற்றை மேலே இழுத்து முத்துக் குளித்தவரைக் கடலினின்று எடுப்பர்.

"பரதவர் மலிந்த பாண்டித் துறையே ! முத்துச் சலாப வேலை நடைபெறும் பொழுது இந்நகரமே புத்துயிர் பெறுகின்றது. உன் கடற்கரையிலே பல நாட்டு வணிகரும் செல்வரும் வட்டமிடுகின்றார்கள். முத்துச்சிப்பி கரையிலே வந்து குவிந்தவுடன் பங்கிடப்படுகின்றது. பாண்டி5