பக்கம்:கடற்கரையினிலே.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

கடற்கரையிலே


நாட்டையாளும் மன்னர்க்குப் பத்தில் ஒரு பாகம்; அடுத்த படியாக மந்திரம் ஒதும் மறையவர்க்கு இருபதில் ஒரு பாகம். முந்நீரில் மூழ்கி முத்தெடுக்கும்போது, மீன்கள் தடை செய்யாவண்ணம் மந்திர வலிமையால் அவற்றைக் கட்டி முத்துக் குளிப்பவரைப் பாதுகாக்கும் மறையவர்க்குரிய மந்திரக் கூலியாம் அஃது. இவ்விரு பங்கும் போக எஞ்சிய முத்துத்தான் பாடு படும் பரதவர்க்குரியதாகின்றது.

"காவலர் போற்றும் காயல் மாநகரே ! எத்தனை வகையான செல்வம் இருப்பினும் பாண்டி மன்னர்க்கு முத்துச் செல்வமே முதன்மையான செல்வம். அழகிய முத்தைக் காணும் பொழுது, அவர் அடையும் இன்பத்திற்கு ஒர் அளவில்லை. இதனாலன்றோ ஆணி முத்துகளை அயல் நாட்டார்க்கு விற்கலாகாது என்னும் அரசாங்க விதி பிறந்திருக்கின்றது. நாட்டுக் குடிகளில் எவரிடமேனும் ஆணிமுத்து அகப்பட்டால், அதிக விலை கொடுத்து அரசனே அதனை வாங்கிக் கொள்கின்றான். ஆதலால், பாண்டி நாட்டுக் கருவூலத்திலுள்ள செல்வத்தை அளவிட்டு உரைத்தல் ஆகுமோ? முன்னோர் தேடிவைத்த முத்தையும் மணியையும் பாண்டி மன்னர் கண்ணினும் அருமையாய்க் காக்கின்றார்கள். மேன்மேலும் அவற்றைச் சேர்ப்பதில் அன்னார் கருத்துச் செல்கின்றதே யன்றி எடுத்துச் செலவழித்தல் என்பது என்றும் இல்லை. சுந்தரபாண்டியன் மார்பில் ஒர் அழகிய முத்தாரம் இலங்குகின்றது. அது, வழி வழியாக அச்செழியன் குலத்தில் வருகின்ற ஒர் அருங்கலம். ஆணி முத்துகளை அணி பெறக் கோத்தமைத்த அந்த ஆரத்தின் விலையை யாவரே மதிக்க வல்லார்? இத்தகைய அணிகள் எத்தனை, எத்தனை !