பக்கம்:கடற்கரையினிலே.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மார்க்கப் போலர்

67


"கடல் வளம் கொழிக்கும் காயலே ! தென்னவன் நாட்டுத் திருவே ஓர் உருவெடுத்தாற்போலத் திகழ்கின்றாய் நீ ! பஞ்ச பாண்டியரும் உன்னை நெஞ்சாரப் போற்று கின்றார்; உன் வாணிக வளத்தினைக் கண்டு உள்ளம் தழைக்கின்றார். மேலைக் கடலிலே செல்லும் வர்த்தகக் கப்பல்கள், உன் துறைமுகத்தைத் தொடாமற் செல்வதில்லை. குட கடலின் வழியாக வரும் கலங்களில் குதிரைகள் ஆயிரம் ஆயிரமாக இங்கே இறங்குகின்றன. பாண்டியர் ஐவரும் குதிரைப்படையின் பெருக்கத்திலே ஆசையுடையவர்; ஆண்டுதோறும் பதினாயிரம் குதிரைகள் வாங்குகின்றனர்; விரும்பி அதிக விலையும் தருகின்றனர். ஆயினும், குதிரை விற்பவர்கள் நேர்மையாக நடந்து கொள்வதில்லை; பஞ்சவரை வஞ்சிக்கின்றார்கள். தாம் விற்கும் குதிரைகள் பாண்டி நாட்டில் வாழ வேண்டும் என்ற எண்ணம் அவர்க்கில்லை. ஒல்லையில் அவை ஒழிந்தால் நலம் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அயல் நாட்டி லிருந்து வாங்கும் குதிரைகளைப் பேணி வளர்க்கத் தெரிந்தவர் தென்னாட்டில் இல்லை. அவை நோயுற்றால் மருந்து கொடுக்க வல்லாரும் இல்லை. குதிரை விற்பவர்கள் அத்தகைய மருத்துவரை இங்கு வரவிடுவதும் இல்லை. பாண்டியர் வாங்கும் குதிரைகள் ஒர் ஆண்டிற்குள் மாண்டு ஒழிந்தால், மீண்டும் பதினாயிரம் பரிகளைக் கொண்டுவந்து விற்கலாமல்லவா? இப்படி அரசனை வஞ்சித்துத் தம் வாணிகத்தை வளர்க்கின்றார் அயல் நாட்டுக் குதிரை வர்த்தகர் ! ஆயினும் இப்படிப் பிழைக்கின்ற ஏழை மக்கள் உன் முத்துச் செல்வத்தைப் பறிக்க முடியுமா? முத்தம் தரும் முந்நீர்த் துறையே! நீ நித்தம் வாழி, வாழி !" என்று வாழ்த்தி விடை பெற்றார் மார்க்கர்,