பக்கம்:கடற்கரையினிலே.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. ஆனந்த ரங்கர்


புதுவை என்னும் புதுச்சேரி, முன்பு பிரெஞ்சு ஆட்சியிலுள்ள துறைமுக நகரம். புதுச்சேரியைப் பாண்டிச்சேரி என்று வழங்கலாயினர் வெள்ளைப் பரங்கியர். அந்நகரில் வாணிகத்தால் வளம் பெற்றவருள் ஒருவர் ஆனந்தரங்கர் மதி நலத்தால் அவர் மன்னரும் மதிக்க வாழ்ந்தார். புதுவையில் ஆட்சி புரிந்த பிரெஞ்சுக் கவர்னர்களில் தலைசிறந்தவன் டூப்ளே என்பவன். அவனுடைய நன்மதிப்பை நிரம்பப் பெற்றவர் ஆனந்த ரங்கர். நாள்தோறும் நாட்டிலே தாம் கண்ட காட்சியையும், கேட்ட செய்தியையும் ஒழுங்காகக் குறித்து வைத்தார் அவர். அதுவே இப்பொழுது சிறந்த சரித்திரக் களஞ்சியமாக விளங்குகின்றது.

பன்னிராண்டு புதுவையில் கவர்னராயிருந்து பணி செய்த டூப்ளேயின் பெருமையை அன்று பிரெஞ்சு நாட்டார் அறிந்தாரல்லர். அரசியலாரின் கோபத்திற்கு ஆளாகி, அப்பெருமகன் பதவியிழந்து, அரச கோலத் துறந்து, பாரீசுக்குக் கப்பலேறிய நாளில் பழைய நினைவுகளெல்லாம் ஆனந்த ரங்கர் உள்ளத்தில் பொங்கி எழுந்தன. அவற்றை எவரிடமும் சொல்லி ஆற்றிக்கொள்ள விரும்பாது அந்தி மாலையில் அவர் பேசலுற்றார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/70&oldid=1248516" இலிருந்து மீள்விக்கப்பட்டது