பக்கம்:கடற்கரையினிலே.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்த ரங்கர்

69


"பொங்கு மாக்கடலே ! புதுவையில் கவர்னராய்ப் பன்னிராண்டு ஆட்சி புரிந்த பெருமகன் இன்று காலையில் கப்பலேறிச் சென்றான். இந்நாளை நான் எந்நாளும் மறக்க முடியுமா? இத்தனை காலமும் என் இன்பதுன்பங்களுக்கெல்லாம் காரணனாய் இருந்த அக்கவர்னரையே நினைத்துக் கரைகின்றது என் நெஞ்சம். ஐயோ! பெருங்கடலே! என் கதையை உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்? நான் சென்னைக்கு அருகேயுள்ள ஒரு சிற்றுாரில் பிறந்தேன். என் தந்தையாரோடு இளமையிலேயே இந்த ஊரை வந்தடைந்தேன். 'புதுவையை அடைந்தவர் புதுவாழ்வு பெறுவர்' என்று என் தந்தையார் நம்பினார். அவர் முயற்சி யுடையவர்; 'வர்த்தகமே அர்த்த சாதனம்' என்று அடிக்கடி சொல்வார். இத்தகைய பண்புடைய தந்தையார் என் பதினாறாம் ஆண்டில் பரமபதம் அடைந்து விட்டார்.

"ஈர நெடுங் கடலே! அன்று தொட்டுக் குடும்பப் பொறுப்பெல்லாம் என் இளந்தலையில் விழுந்தது. ஆயினும், நான் தயங்கவில்லை; 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்ற முதுமொழியை நம்பி வர்த்தகம் செய்யத் தலைப்பட்டேன்; புதுவையில் அங்காடி வீதியிலே ஒரு சிறு பாக்குக்கடை வைத்தேன். அக்கடையே என் ஆக்கத்திற்கு அடிப்படையாய் அமைந்தது. ஆதலால், அக்கடையை விடாமல் இன்றுவரை நடத்தி வருகின்றேன். அதில் ஆனந்தமாய் இருந்து என் தாய்மொழியைக் கற்கவும் கேட்கவும் எனக்கு ஆசை அதிகம். 'செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்' என்ற அருமைத் தமிழ்மறையை நான் எந்நாளும் மறந்தறியேன். அருந் தமிழ் விருந்தளிக்கும் அறிஞருக்குப் பெரும் பொருள் அளிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஒருநாள் மதுரகவி என்னும் பாவலர் என்னைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/71&oldid=1248518" இலிருந்து மீள்விக்கப்பட்டது