ஆனந்த ரங்கர்
71
நிழலும் அமைந்த திருவொற்றியூரிலே ஒரு பேட்டையை உண்டாக்கினார்; நூறு குடும்பங்களைக் கொண்ட அக்குடியிருப்புக்குக் 'காலட் பேட்டை' என்ற பெயர் தொடுத்தார். காலட் கவர்னர் கப்பலேறிப் போய்விட்டார். அவர் பெயர் தாங்கிய பேட்டை 'காலடிப் பேட்டை' என்று இப்போது வழங்குகின்றது. வெள்ளைப் பெயரால் விளையும் விபரீதத்திற்கு வேறு சான்று வேண்டுமோ?
"முந்நீர்ப் பெருந்துறையே! இத்தகைய பேராசை டூப்ளே கவர்னரிடமும் இருந்தது. புதுச்சேரியின் பக்கமாக அமைந்த ஒரு சிற்றுாருக்கு அவர் டூப்ளேப் பேட்டை என்று பெயரிட்டார்; எல்லோரும் அவ்வூரை அப்படியே அழைக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்; துரைத்தன அதிகாரிகள் டூப்ளேப் பேட்டையிலேதான் வீடு கட்டி வசிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆயினும், நாட்டு மக்களுக்குப் புதுப்பெயரிலே நாட்டமில்லை. ‘தானாய்ப் பழுத்தால் பழமா, தடியால் அடித்தால் பழமா?' என்பது பழமொழியல்லவா? மேலும், டூப்ளேப் பேட்டை என்ற பெயர் நாட்டுமக்கள் நாவில் நல்ல முறையில் வருமா? இயற்கைக்கு மாறாக வற்புறுத்தினால் காலடிப் பேட்டை போன்ற விபரீதந்தான் விளையும். டூப்ளேப் பேட்டை என்பது துவளைப் பேட்டையாகுமோ? அல்லது தவளைப் பேட்டையாகுமோ? யார் அறிவார்? பேராசையுடைய டுப்ளேயின் செவியில் இதைச் சொன்னால் ஏறாதென்று நான் சும்மா இருந்துவிட்டேன்.
“நலமார்ந்த நற்கடலே ! ஒரு நன்றி செய்தாரை உள்ளத்தில் வைத்துப் போற்றுவது தமிழர் பண்பு. அந்த முறையில் எனக்குப் பெரு நன்றி செய்த டூப்ளே துரையை நான் என்றென்றும் போற்றுவேன். புதுவையில் பிழைக்க