ஆனந்த ரங்கர்
75
பெருகிற்று; வர்த்தக வளம் குறுகிற்று; பாரீசு நகரம் பரபரப்புற்றது. டூ ப்ளேதான் இதற்கெல்லாம் காரணம் என்ற கருத்து பரவிற்று. எல்லோரும் அவரைக் கைவிட்டார். முன்பு கரும்பாய் இருந்தவரெல்லாம் வேம்பாயினர்; வேலையை விட்டு அவரை நீக்கினர்; மற்றொருவரைக் கவர்னராக நியமித்தனர். புதியதாக வந்த கவர்னரிடம் புதுவையை ஒப்புவித்து, பாரீசை நோக்கிப் புறப்பட்டார் டூப்ளே,
'கதறும் பெருங்கடலே ! அந்தோ! அன்று கவர்னராய் அவர் இந்தத் துறைமுகத்தில் வந்து இறங்கிய பெருமை என்ன ! அவரை வரவேற்ற மாட்சி என்ன ! அலங்காரக் காட்சி என்ன! பன்னிராண்டு அவர் ஆட்சி புரிந்தார்; அப்போது அவர் நாவசைத்தால் இந்நாடசையுமே ! அவர் அறிவிற்சிறந்தவர்; ஆள்வினையுடையவர்: ஆங்கிலேயரை அலற வைத்தார்; மகமதியரை மறுக வைத்தார்; பாதுஷாவையும் பதற வைத்தார். இத்தகைய பிரெஞ்சுக் கவர்னர் எளியராய்த் தனியராய் இன்று இந்நகரை விட்டுச் செல்கின்றார்; நிதியிழந்து, நிமிர்ந்த நடையிழந்து, வழியனுப்ப நண்பர் யாருமின்றி, வைகறைப் பொழுதிலே இப்பதவியை விட்டுப் போகின்றார். காட்டில் அரசு வீற்றிருந்த சிங்கத்தைக் கூட்டில் அடைத்தாற் போல் அவரைக் கப்பலில் ஏற்றிக் குற்றவாளிபோல் கொண்டு செல்கின்றார்களே ! இன்று அக்டோபர் மாதம் பதினான்காம் தேதி, இந்நாள் அவர்க்கு அட்டமத்தில் சனியாய் அமைந்ததே! பாரிசு நகரத்தில் இனி அவர் என்ன பாடுபடப்போகின்றாரோ?” என்று கண்ணிர் வடித்துக் கொண்டு கடற்கரையை விட்டகன்றார் ஆனந்த ரங்கர்,