உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடற்கரையினிலே.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

கடற்கரையிலே


தன்னகத்தே தேக்கி வைத்துக்கொண்டு, ஆனந்தமாகக் கொட்டமடிக்கின்றதே ! இது தகுமா, முறையா? இந்நெடுங்கடல் கொடுங்கடலாக அன்றோ இருக்கிறது? 'கொடு' என்றால், கொடுமை வாய்ந்த கடல் கொடாதென்று அறிந்துதானே கருணை மா முகில் இடியென்னும் படை தாங்கி எழுந்து வருகின்றது ! ஈகையால் வருவதே இன்பம் என்று அறியாதாரை அடித்து வாங்குதல் அறமே போலும் ! அன்னாரைத் தடிந்துகொள்ளுதல் தக்கதேயாகும் என்று கருதியன்றோ இம்மேகம் கடல் வெள்ளத்தைக் கொள்ளைகொண்டு கனத்த மழை பொழியப் போகின்றது?

"கருணை மாமுகிலே ! வான வெளியிலே உருண்டு திரண்டு செல்கின்ற உன்னைக் காண என் கண் குளிர்கின்றது; உள்ளம் மகிழ்கின்றது. கருமையின் அருமையை இன்று நன்றாக அறிந்தேன். கருணையின் நிறம் கருமைதானோ என்று கருதி மனங்களிக்கின்றேன். கார்முகிலே ! நீ அறத்தின் சின்னம்; அருளின் வண்ணம்; கொடாக் கடலிடம் தண்ணீரைக் கொள்ளை கொண்ட உன்னை இம்மாநிலம் தூற்றவில்லை; போற்றுகின்றது; கொண்டல் என்று உன்னைக் கொண்டாடுகின்றது. உன் கருணை வடிவத்தில் அழகினைக் கண்டனர் பண்டைத் தமிழர்; அதனால் உன்னை 'எழிலி என்று அழைத்தனர்.

" கைம்மாறு வேண்டாக் கருமுகிலே ! உனக்கு மனமுவந்து தண்ணீர் அளித்தால், தனக்கும் நலம் உண்டு என்பதை அறியாது போயிற்றே இக்கடல் ! நீ மழை



1. எழில் அழகு எழிலி - அழகுடையது {a thing of beauty}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/8&oldid=1247501" இலிருந்து மீள்விக்கப்பட்டது