17.கால்டுவெல் ஐயர்
தென்பாண்டி நாட்டிலே ஐம்பதாண்டு வாழ்ந்து தமிழ் மொழிக்கு அரும்பெருந்தொண்டு புரிந்தவர் கால்டுவெல் ஐயர். தென்னிந்தியாவில் வழங்கும் மொழி களின் தன்மையை உள்ளவாறு உணர்ந்து, அவற்றின் பெருமையை மேலை நாட்டார்க்குக் காட்டிய மேதை அவரே; நெல்லை நாட்டின் வரலாற்றை நல்ல முறையில் முதன் முதல் எழுதித் தந்தவர் அவரே. பாண்டி நாட்டுக் கடற்கரையிலே தூர்ந்து கிடந்த துறைமுகங்களின் பழம் பெருமையை வெளியிட்டவர் அவரே. இத்தகைய கால்டுவெல், பாண்டி நாட்டு மூதூராகிய கொற்கைக்கு மூன்று மைல் துரத்தில் விலகி நிற்கும் கருங் கடலை நோக்கிப் பேசலுற்றார் :
"கொற்கைக் கருங்கடலே ! ஐயாயிரம் மைலுக்கு அப்பாலுள்ள அயர்லாந்து தேசத்திலே பிறந்தவன் நான்; ஆங்கில நாட்டு நாகரிகத்திலே தோய்ந்து வளர்ந்தவன்; கிருஸ்து மத சேவை செய்ய ஆசையுற்று இளமையிலே தமிழகம் போந்தேன்; தென் தமிழ்நாடு என்னும் நெல்லை நாட்டையே என் தாயகமாகக் கொண்டேன்; வடமொழியும் தென்மொழியும் வல்லார்வாய்க் கேட்டுணர்ந்தேன். தென்மொழியின் திறம் என் கருத்தைக் கவர்ந்தது. அம்மொழியின் நீர்மை என் உள்ளத்தை அள்ளுவதாயிற்று. ஆதலால், தமிழ்ப்பணியே தலைப்பணியாகக் கொண்டேன்.