பக்கம்:கடற்கரையினிலே.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கால்டுவெல் ஐயர்

83


நிற்கின்றாயே! அந்தோ! கொற்கை மாநகரே ! பாண்டி நாட்டு மக்களே ! நின் பழமையை அறியாமல் வாழ்கின்றார்களே ! தாலமி என்ற யவன அறிஞன் எழுதிவைத்த குறிப்பன்றோ இன்று நின் பழம் பெருமையை விளக்குகின்றது.

"துறையைத் துர்த்த திருநதியே! தமிழ் மணக்கும் பொதிய மலையினின்றும் நீ புறப்பட்டு வருகின்றாய். எழுபது மைல் நடந்து நெல்லை நாட்டுக்குச் செழுமை தருகின்றாய்; உன்னாலேயே தென் பாண்டி நாடு பயிர் முகங் காட்டும் பழனத் திருநாடாயிற்று. நெல்லை நாட்டை வாழ்விக்கும் உன்னை 'நல்லை' 'நல்லை என்று நாவார வாழ்த்துகின்றேன்; மனமாரப் போற்றுகின்றேன். ஆயினும் உன் கொடுமையை என்னால் மறக்க முடியவில்லையே! உன்னாலேயே உலகம் புகழ்ந்த கொற்கைத் துறைக்கு இன்னல் விளைந்தது. உன் தண்ணீரிற் கலந்து வந்த மண்ணும் மணலும் கொற்கைத் துறைமுகத்தைத் துர்த்துவிட்டன. நெல்லை நாட்டை நீ ஊட்டி வளர்த்தாய்; அதன் நல்ல துறைமுகத்திற்குக் கேட்டை விளைத்தாயே ! நிலத்துக்கு நீர் அளித்தாய்; கடலுக்கு மண்ணடித்து விட்டாயே!

"பாண்டிப் பழம் பதியே ! 'கெட்டார்க்கு இவ்வுலகில் நட்டார் இல்லை' என்னும் பழமொழிக்கு நீயும் ஒர் எடுத்துக்காட்டாயினாய் ! கருங்கடல் உன்னைக் கைவிட்டு அகன்றபோது, வறும்பூத் துறக்கும் வண்டுபோல வணிகரும் செல்வரும் உன்னை விட்டுப் பெயர்ந்தார்கள்; கடலருகே யமைந்த காயல் என்னும் இடத்தைத் துறைமுகமாகத் திருத்தி அங்கே குடியேறினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/85&oldid=1252831" இலிருந்து மீள்விக்கப்பட்டது