பக்கம்:கடற்கரையினிலே.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

கடற்கரையிலே


வாணிகத்தால் தழைத்தோங்கித் தலையெடுத்தது காயல் மாநகரம். அதன் சிறப்பை எழுதிப் போந்தார் மார்க்கப் போலர். ஆயினும், காயலின் வாழ்வும் நெடுங்காலம் நிலைக்கவில்லை. உனக்கு நேர்ந்த கேடு காயலையும் தொடர்ந்து, பொருநையாற்று மண்ணால் காயலும் தூர்ந்து ஒழிந்தது. பொருநையாற்று முகத்தில் துறைமுகம் அமைத்தால் அது நிலைக்காது என்பதை அறிந்த நெல்லை நாட்டார் தூத்துக்குடியைத் துறைமுக நகரமாக்கினார்கள். சரித்திர முறையில் பாண்டி நாட்டின் ஆதித் துறைமுகம் நீயே; இடைக்காலத் துறைமுகம் காயல்; தற்காலத் துறைமுகம் தூத்துக்குடி இவற்றையெல்லாம் ஆராய்ந்தறிவதற்குள் நான் பட்ட பாடு கொஞ்சநஞ்ச மன்று.

குறுகி நிற்கும் கொற்கைப் பதியே ! சென்ற ஆண்டில் ஒரு நாள், சில வேலையாள்களோடு இங்கு வந்து சேர்ந்தேன். அங்குமிங்கும் சில இடங்களை அகழ்ந்து பார்க்க வேண்டு மென்பது என் ஆசை. அப்போது இவ்வூர்வாசிகள் கூடித் திரண்டார்கள்; என்னை என்னென்னவோ மறைவாகப் பேசினார்கள்; 'இந்தப் பாதிரியார் புதையல் எடுக்கப் புறப்பட்டு வந்திருக்கிறார்' என்றான் ஒருவன். புதையலை எடுத்தால் பூதம் விடுமா? என்று மாற்றம் உரைத்தான் மற்றொருவன். அன்னார் கருத்தை அறிந்துகொண்டேன். உடனே முதியோர் சிலரை என்னருகே அழைத்தேன். 'பூதங் காக்கும் புதையலிடம் நான் போவதில்லை' என்று வாக்களித்தேன். அதை ஏற்றுக் கொண்டு இவ்வூரார் என்னை வேலை செய்ய விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/86&oldid=1247668" இலிருந்து மீள்விக்கப்பட்டது