பக்கம்:கடற்கரையினிலே.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கடற்கரையிலே


நாடெங்கும் பரவிவிட்டதே. இத்தீமை தீரும் நாள் எந்நாளோ? இம்மட்டோ! நீ சிறந்து விளங்கும் கடற்கரையின் பெயர்தான் எப்படிச் சீர்கெட்டுக் கிடக்கின்றது? 'சோழ மண்டலக் கரை' என்பதன்றோ உன் கரையின் பெயர்? தமிழின் சிறப்பொலி ழகரம் வெள்ளையர் நாவில் நுழைவதில்லை. சோழ மண்டலம் அவர் நாவில் 'கோரமண்டல்' ஆயிற்று. ஆங்கிலக் கல்லூரிகளிற் பயிலும் இந்நாட்டு மாணவர்கள் 'கோரமண்டல் கோஸ்டு' என்று நித்தமும் தம் நெஞ்சிலே குத்திக்கொள்கிறார்கள். இவ்வாறு கட்டழிந்து கிடக்கிறது நம் கல்வி முறை !

"மாசற்ற மணிநகரே !. இப்படிச் சீர்குலைந்த பெயர்கள் இன்னும் எத்தனை எத்தனையோ ! சென்னையின் இருப்புப் பாதை நிலையங்களில் தமிழ் அன்னை படும் பாடுதான் என்னே! எழுமூர் ஆங்கிலத்தில் எக்மூர் ஆயிற்று. கடற்கரை நிலையம் 'பீச்' என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. கோட்டைக்கு அடுத்த நிலையம் 'பார்க்கு' என்று குறிக்கப்படுகின்றது. இவை ஏன் தமிழ்ப் பெயர் பெறலாகாது? பீச்சு என்பதைக் கடற்கரை என்று மாற்றினால் என்ன கேடு? பார்க்கு என்பதை 'பூங்கா என்று அழைத்தால் என்ன பிசகு?

"சென்னைக் கடலே ! உன்னைப் போற்றுகின்றேன். வெள்ளையர் ஆட்சியினின்று நீ விரைவில் விடுபடல் வேண்டும்; இடையே வந்த கேடெல்லாம் ஒழியவேண்டும். நீ என்றும் தமிழ்க் கடலாகத் திகழவேண்டும்; அருந் தமிழ்த்தாய் அதற்கு அருள் புரியவேண்டும்” என்று பணிந்து வணங்கி விடை பெற்றார் பரிதிமாற் கலைஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/92&oldid=1247679" இலிருந்து மீள்விக்கப்பட்டது