பக்கம்:கடற்கரையினிலே.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கடற்கரையிலே


விளங்குகின்றாய்! முன்னாளில் வளமுற்றிருந்த கொற்கைப் பெருந்துறையின் வழித்தோன்றல் நீயே என்று உணர்ந்து உன்னை வணங்குகின்றேன்; வாழ்த்துகின்றேன். ஆயினும், அக்காலத் துறைமுகத்தின் மாட்சியையும், இக்காலத்திற்காணும் காட்சியையும் நினைத்துப் பார்க்கும்பொழுது என் நெஞ்சம் குமுறுகின்றதே! பார் அறிந்த கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி உயர்ந்து பறந்தது. கொற்கைக் கடல் முத்துவளம் கொழித்தது. பழங்குடிகளாகிய பரதவர் மரக்கல வாணிகத்தால் வளம் பெற்று மாட மாளிகையில் வாழ்ந்தார்கள். இது, சென்ற காலத்தின் சிறப்பு. இன்று, மீனக்கொடி எங்கே? ஆங்கில நாட்டுக் கொடியன்றோ இங்கே பறக்கின்றது? பரங்கியர் கப்பலன்றோ எங்கும் பரந்து திரிகின்றது? கொள்ளை லாபம் அடிக்கின்ற வெள்ளையர் கப்பலில், கூலி வேலை செய்கின்றனர் நம் நாட்டு மக்கள் !சொந்த நாட்டிலே வந்தவர்க்கு அடிமைசெய்து வயிறு வளர்ப்பது ஒரு வாழ்வாகுமா? 'வசையொழிய வாழ்வாரே வாழ்வார்' என்ற வள்ளுவர் வாய்மொழியை மறக்கலாமா?

"வளமார்ந்த துறைமுகமே ! இந்த வசையை ஒழிப்பதற்காக இந்நகரில் சுதேசக் கப்பல் கம்பெனியொன்று இருபதாண்டுகளுக்கு முன் உருவாயிற்று. பாரத நாட்டுச் செல்வரும் அறிஞரும் அந்தக் கம்பெனியில் பங்கு கொண்டார்கள். பழங்காலப் பாண்டியரைப்போல் மதுரை மாநகரிலே தமிழ்ச் சங்கம் அமைத்து, புலவர் பாடும் புகழுடையவராய் விளங்கிய பாண்டித்துரைத் தேவர் அக்கம்பெனியின் தலைவர் ஆயினார். அதன் செயலாளனாக அமைந்து பணி செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/94&oldid=1247682" இலிருந்து மீள்விக்கப்பட்டது