பக்கம்:கடற்கரையினிலே.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

கடற்கரையிலே


எப்போதும், 'அரசு வாழ்க' என்று பாடும். இத்தகைய சூழ்நிலையிலே எழுந்தது சுதந்தர நாதம் ! வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் வங்க நாட்டிலே பிறந்தது; காட்டுக் கனல்போல் எங்கும் பரவிற்று. ' சுதந்தரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்' என்று வட நாட்டிலே மார் தட்டி நின்றார் மராட்டிய வீரர் ஒருவர். அவரே பாரத நாடு போற்றும் பால கங்காதர திலகர். தென்னாட்டிலே தோன்றினார் நாவீறுடைய நண்பர் பாரதியார். அவர் அஞ்சாத நெஞ்சினர். செஞ்சொற் கவிஞர்; 'வந்தேமாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்' என்ற அழகிய பாட்டிசைத்து, நாட்டிலே ஆர்வத்தைத் தட்டி எழுப்பினார்; 'நொந்தே போயினும், வெந்தே மாயினும் வந்தேமாதரம்' என்னும் வீர மந்திரத்தை விடமாட்டோம் என்று வீறு பெறக் கூறினார்.

"புதுமை கண்ட துறைமுகமே ! அந்நாளில் 'வந்தே மாதரம்' என்றால் வந்தது தொல்லை. அந்த வாசகத்தில் ஒரு வஞ்சகம் இருப்பதாக ஆங்கில அரசாங்கம் கருதிற்று. பொதுக் கூட்டங்களிலும், தொழிலாளர் கூட்டங்களிலும் நான் பேசும் பொழுது 'வந்தே மாதர'த்தை அழுத்தமாகச் சொல்வது வழக்கம். அதைக் கேட்டு நாட்டு மக்கள் ஊக்கமுற்றார்கள்; உணர்ச்சி பெற்றார்கள். உள்ளதைச் சொன்னால் கள்ளமுடையவர் உள்ளம் எரியுமல்லவா? எரிவுற்ற அரசாங்கம் என்னை எதிரியாகக் கருதிற்று; என்மீது பல வகையான குற்றம் சாட்டிற்று. நாட்டின் அமைதியை நான் கெடுத்தேனாம் ! நல்ல முதலாளிமாருக்குத் தொல்லை கொடுத்தேனாம் ! வெள்ளையர்மீது