பக்கம்:கடற்கரையினிலே.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிதம்பரனார்

95


வெறுப்பை ஊட்டினேனாம் ! வீர சுதந்தரம் பெற வழி காட்டினேனாம் ! வெள்ளைக் கோர்ட்டிலே இக்குற்ற விசாரணை விறுவிறுப்பாக நடந்தது. இரட்டைத் தீவாந்தர தண்டனை எனக்கு விதிக்கப் பட்டது. அப்பீல் கோர்ட்டிலே சிறைத்தண்டனையாக மாறிற்று அத்தீர்ப்பு. ஆறாண்டு கோவைச் சிறையிலும் கண்ணனூர்ச் சிறையிலும் கொடும்பணி செய்தேன். என் உடல் சலித்தது; ஆயினும், உள்ளம் ஒரு நாளும் தளர்ந்ததில்லை; சிறைச் சாலையைத் தவச்சாலையாக நான் கருதினேன், கை வருந்த மெய்வருந்தச் செய்த பணிகள் எல்லாம் தாய்நாட்டின் 'விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம்' என்று எண்ணி உள்ளம் தழைத்தேன்.

“செல்வச் செழுந்துறையே ! சிறைச்சாலையில் என்னைக் கண்காணித்தவர் பலர். கடும்பணி இட்டவர் பலர். அவரை நான் எந்நாளும் வெறுத்ததில்லை. ஆனால், முறை தவறி நடந்தவர்களை எதிர்த்தேன். வரை தவறிப் பேசியவர்களை வாயால் ஒறுத்தேன். ஒரு நாள் மாலைப் பொழுது; உடல் நலிந்து, உள்ளம் தளர்ந்து சிறைக் கூடத்தில் உட்கார்ந்திருந்தேன். அங்கே வந்தான் ஒரு ஜெயிலர், அதிகாரத் தோரணையில் நீட்டி நிமிர்ந்து நின்று கொண்டு எனக்குச் சில புத்திமதி சொல்லத் தொடங்கினான். அப்போது என் மனத்தில் கோபம் பொங்கி எழுந்தது. 'அடே மடயா! நீயா எனக்குப் புத்திமதி சொல்பவன்? மூடு வாயை ! உனக்கும் உன் அப்பனுக்கும் புத்தி சொல்வேன் நான். உன்னுடைய கவர்னருக்கும், மன்னருக்கும் புத்தி சொல்வேன் நான்' என்று வேகமுறப்