பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99



அதற்கும் அப்பால் மீதப்பட்டவர்களை விரட்டி விட்டான். ஸ்பானியர்களிடமிருந்து அவர்கள் தப்பியோடிய காட்சி மிகப் பரிதாபமாக இருந்ததென்று கண்டவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களாவது தப்பிப் பிழைத்தார்கள். கப்பலில் சென்றவர்களில் இருநூறு பேர் வழியிலேயே இறந்து போய்க் கடலில் தூக்கி எறியப்பட்டார்கள். மீதி முந்நூறு பேரும், பலவிதமான நோய்களுக்கும் துன்பத்துக்கும் ஆளானார்கள். ஸ்பெயின் போய்ச் சேர்ந்த பின் அந்நாட்டு வெப்பதட்ப நிலை ஒத்துக்கொள்ளாமல் பலர் இறந்து போனார்கள். மிச்சம் மீதி இருந்தவர்கள் வியாபாரப் பொருள்களைப் போல் விற்கப்பட்டார்கள்.

அடிமையாகப் பிடிபட்டு வந்தவர்களில் இசபெல்லாவிலிருந்து தப்பியோடியவன் தலைவன் குவாட்டி குவானா. இஸ்பானியோலா முழுவதிலும் சுமார் இரண்டரை லட்சம் டாயினோக்கள் இருந்தார்கள். அந்த இரண்டரை லட்சம் பேரையும் ஒன்று சேர்த்து ஸ்பானியருக்கெதிராகப் போராட முயன்றான் தலைவன் குவாட்டி குவானா. ஆனால் டாயினோக்கள் இடையே ஒற்றுமையுணர்ச்சியில்லாததால் அவன் முயற்சி பலிக்கவில்லை. ஸ்பானியர்களிடம் வெடி மருந்துகள் இருந்தன. அதற்கும் மேலாக, டாயினோக்களிடையே ஒரு தலைவனை ஆதரித்து மற்றொரு தலைவனுடன் போர் மூட்டிவிட்டு, அவர்களைத் தங்களுக் குள்ளேயே போராடச் செய்து அழிவெய்தச் செய்யும் திறமை இருந்தது.

கவோனாபோ என்ற தலைவன் பெரும் வல்லமையுடையவன். முன் நாவிடாடுக் கோட்டையை அழித்தொழித்தவன் இவன் தான். அவனை ஸ்பானியர்கள் பிடித்துக் கொன்ற முறை மிக அக்கிரமமானது. ஓஜிடா, அத்தலைவனுக்கு விருந்து நடத்துவதாகச் சொல்லி இசபெல்லாவுக்கு அழைத்தான். விருந்துக்கு வந்த அவனைக் கைகளை நீட்டச்