பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
106

எதற்காகப் போகிறான் என்பது பற்றி திட்டவட்டமான செய்திகள் கிடைக்கவில்லை.

1497-ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில், அரசர் பெர்டினாண்டும், அரசி இசபெல்லாவும், கொலம்பசின் உரிமைகளையும் பட்டங்களையும் மீண்டும் உறுதிபடுத்தினார்கள். இஸ்பானியோலாவில் குடியேறுவதற்கு சுமார் முந்நூறு பேர்களை ஆயத்தப்படுத்தும்படி உத்தரவிட்டார்கள். எல்லோருக்கும் ஆகும் செலவை அரசாங்கத்திலேயே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தார்கள். குடியேற்ற நாட்டில் போயிருக்க முப்பது பெண்களையும் ஆயத்தப் படுத்தினான் கொலம்பஸ்.

சிறு குற்றங்கள் செய்து சிறையில் அடைபட்டுக் கிடந்த கைதிகள் யாவரும், குடியேற்ற நாட்டிற்குச் செல்வதற்காக மன்னிப்புப் பெற்று விடுதலை யடைந்தார்கள். இஸ்பானியோலாவிற்குச் செல்ல மறுத்தவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அங்கு சென்று ஒன்றிரண்டு ஆண்டுகள் வாழ்ந்துவர ஒப்புக்கொண்டவர்களே விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஏற்பாடுகள் எல்லாம் செய்து கப்பல்கள் புறப்பட ஓராண்டாயிற்று. காரணம், அரசாங்கத்தின் இருப்பில் பணம் இல்லாமையேயாகும். கைதிகளைத் தவிர மற்ற குடியேற்றவாதிகள் யாரும் முன்பணமாகத் தங்கள் சம்பளத்தைப் பெறாமல் பயணப்படத் தயாராக இல்லை.

1498-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து கப்பல்கள் இஸ்பானியோலாவிற்கு நேராகப் புறப்பட்டுச் சென்றன.

கொலம்பஸ் தனக்கென்று ஒதுக்கப்பட்ட மூன்று கப்பல்களுடனும். காரலாஜல் என்ற தலைவனின் கீழ்ப் புறப்பட்ட மூன்று கப்பல்களுடனும் 1498-ம் ஆண்டு மே மாதம் கடைசி வாரத்தில் தான் புறப்பட்டுச் சென்றான்