பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

புறப்பட்டன. எங்கோ எரிமலை வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பில் அலைகள் மலைகளென உயர்ந்தன. கப்பல்களை ஒரே தூக்காகத் தூக்கி மேலே கொண்டு சென்று அதே வேகத்தில் கடலின் அடி தெரியும்படியான கீழ்ப்பகுதிக்குத் தள்ளி இப்படியாகச் சிறிது நேரம் அலைக்கழித்தன. அதிர்ஷ்ட வசத்தாலும், மாலுமிகளின் திறத்தாலும் எவ்வித ஆபத்தும் உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. என்றாலும் அப்போது மாலுமிகள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பயம் அவர்கள் ஆயுட்காலங்களில் வேறெப்போதும் ஏற்பட்டதில்லை. அந்த இடம் தங்கியிருப்பதற்கு ஏற்ற இடம் அல்ல என்று கருதிய கொலம்பஸ், அதற்கு நாகப் பாம்பின் வாய் என்ற பொருளுடைய லாபோக்காடிலா சர்ப்பே என்ற பெயரை வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.

வடக்கே தொலை தூரத்தில் அடிவானத்தில் சில மலைகள் தெரிந்தன. அந்த மலைகள் இருந்த பரியாத் தீபகற்பத்தை நோக்கி கப்பல்களைச் செலுத்திய கொலம்பஸ் அன்று இரவு பாகியாத் துறைமுகத்தின் அருகே நங்கூரம் பாய்ச்சினான். மறுநாள் அந்தப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவரக் கிளம்பினான், அந்தப் பகுதியில் பல அழகான வசதியான துறைமுகங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றான எசினாடா யாக்குலா என்ற துறைமுகத்தில் கப்பல்களை நிறுத்தினான். அந்த மிக அழகிய கடற்கரையையுடைய துறைமுகத்தில் சிறிது தூரத்தில் மிகப் பெரிய வீடு ஒன்று தெரிந்தது. அதன் எதிரே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. ஆனால், கொலம்பசும் ஸ்பானியர்களும் இறங்கிச் சென்றபோது, அங்கே மக்கள் யாரும் காணப்படவில்லை. எல்லோரும் ஸ்பானியர்களைக் கண்டு பயந்தோடி விட்டார்கள். அவர்களை வரவேற்க அந்தக் குடிசையில் குரங்குகள்தான் இருந்தன.