பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

மார்கரிட்டா என்று பெயர் வைத்தான். அந்தத் தீவில் முத்து நிறையக் கிடைத்தது, ஆனால், இஸ்பானியோலாவில் அமைந்துள்ள சாண்டா டோமிங்கோ என்ற புதிய நகரத்திற்கு விரைந்து செல்லவேண்டும் என்று எண்ணியதால் கொலம்பஸ் அங்கு இறங்கவில்லை. மார்கரிட்டாவில் அவன் இறங்கி முத்துக்கள் சேர்த்துக் கொண்டு போயிருந்தால், ஸ்பெயினில் அவனுக்கு நல்ல வரவேற்பிருந்திருக்கும். ஆனால், அவனுடைய அதிர்ஷ்ட குறைவு அவனை அங்கு இறங்க விடவில்லை.

எங்கும் சுற்றிப் பார்த்த பிறகுதான் கொலம்பஸ் தான் ஒரு பெரிய புதிய கண்டத்தில் இறங்கியிருப்பதை உணர்ந்தான். பரியாவைப் பற்றிய தன் எண்ணத்தைக் கப்பல் குறிப்புப் புத்தகத்தில் அவன் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறான்.

இதுவரை யாரும் கண்டறியாத ஒரு பெரிய கண்டம் இதுவென்றே நான் நம்புகிறேன். முன் என்னிடம் சிறைப் பட்ட பல கரீபிய இனத்தைச் சேர்ந்த இந்தியர்கள், தெற்கே ஒரு பெருநிலம் இருப்பதாகப் பல முறை கூறி இருக்கிறார்கள். அங்கே நிறையத் தங்கம் கிடைக்கும் என்று அவர்கள் கூறினார்கள். இது மட்டும் ஒரு பெரிய கண்டமாயிருந்தால் இது ஒரு பேர் ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு பெரிய ஆறு ஒன்று - 48 காத தூரத்திற்கு நல்ல தண்ணீர் பாயும் கடல் போல இருப்பதால் இது நிச்சயமாக ஒரு பெரிய கண்டமாகத்தான் இருக்க வேண்டும்.

"இந்த நிலப்பகுதிகள் வேறு ஓர் உலகமேயாம்" என்றும் கொலம்பஸ் குறிப்பிட்டிருக்கிறான். அவன் அதே குறிப்புப் புத்தகத்தில் மேலும் இரண்டு நாள் கழித்து, அந்த நிலப்பகுதி ஒரு சொர்க்கம் என்றே வருணித்துப் பலவாறாக எழுதியிருக்கிறான்.