பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் மூல மையமாக விளங்கிய லிஸ்பன் நகரம் வரலாற்றுப் பெருமைமிக்கது. அரை நூற்றாண்டுக்கு முன்னர் கடல் வீரன் ஹென்றி என்று அழைக்கப்படும் போர்ச்சுகல் இளவரசன் வின்சன்ட் முனையில் அமைத்திருந்த கடல்வழி ஆய்வுக் கழகம் மத்திய தரைக் கடல் மாலுமிகளின் கவனத்தை ஈர்த்தது, அட்லாண்டிக் கடலிலும், ஆப்பிரிக்காவின் மேலைக் கரையிலும் பயணங்கள் செய்து வருவதற்கு இளவரசர் ஹென்றி ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்தார். அவருடைய கப்பல் தலைவர்கள் அமெரிக்கா செல்லும் வழியில் உள்ள அசோர்ஸ் தீவுகள் என்ற ஏழு தீவுகளைக் கண்டு பிடித்தார்கள். அவ்வப்போது புதுப்புது இடங்களைக் கண்டுபிடித்த அக் கப்பல் தலைவர்கள் கொலம்பஸ் லிஸ்பன் வந்து சேர்ந்த சமயம் கினியா வளைகுடாவைக் கடந்து விட்டார்கள். ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சிவப்புத் துணியையும், கண்ணுடிக் கற்களையும் குதிரைகளையும் ஏற்றிச் சென்ற கப்பல்களெல்லாம் திரும்பி வரும்போது, தந்தமும் தங்கப் பொடியும் மிளகும் அடிமைகளும் கொண்டுவந்து சேர்த்தன. ஜினோவாக் காரர்களின் வாணிகத்தை யெல்லாம், வேனிஸ்காரர்களும் துருக்கிக்காரர்களும் கைப்பற்றிக் கொண்ட சமயம், லிஸ்பன் நகரம் வாணிபத்துறையிலே மேலோங்கி வளர்ந்து கொண்டு வந்தது. ஆப்பிரிக்காக் கண்டத்தைச் சுற்றி இந்தியாவுக்குக் கடல் வழியைக் கண்டு பிடிப்பதற்குப் போர்ச்சுக்கீசிய அரசாங்கம் ஊக்கமளித்துக் கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட முன்னேற்றமான சூழ்நிலையில் இருந்த லிஸ்பன் மாநகருக்குக் கொலம்பஸ் வந்து சேர்ந்தது அவனுடைய பேறு என்றுதான் சொல்லவேண்டும். பல்வகையிலும் முற்போக்கடைந்திருந்த லிஸ்பன் நகருக்கு வந்த கொலம்பஸ் கல்வியில் ஆர்வம் கொண்டான். இலத்தீனும்,