பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

கண்டுபிடித்தார்? கால் காசுக்குப் பெறாத கடல் தீவுகள்!" என்று வேறு பேசினார்கள். இந்தத் தொந்தரவுகன் எல்லாம் இல்லாதொழிந்தன.

கப்பல் தலைவர்கள் மாலுமிகள் எல்லோருக்கும் அரசாங்கம் சம்பளம் கொடுத்தது. ஆறு மாதச் சம்பளம் முன்பணமாகக் கொடுக்கப்பட்டது. பயணம் முடிந்து திரும்பி வருபவர்களுக்கு ஒரு பானை பணம் கொடுக்க ஒப்பந்தமாகியிருந்தது. 1502-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் நாள் செலிலித் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் புறப்பட்டன. மே பதினொன்றாம் நாள் சாடிஜ் துறைமுகத்தை யடைந்த கப்பல்கள் காற்றுத் தோதாக இல்லாததால் காத்திருக்க நேரிட்டது. மொரோக்கோவில் உள்ள அர்ஜிலாத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுப் பின் புறப்பட்டு மே இருபதில் லாங்பால்மாஸ் துறைமுகம் அடைந்தன. கானரிப் பெருந் தீவுகளிலிருந்து கப்பல்கள் மேற்கு நோக்கிப் புறப்பட்ட நாள் மே இருபத்தைந்து!

சரியாக இருபத்தொரு நாள் பயணம் செய்து ஜூன் 15-ம் நாள் தென் டொமினிகாவை அடுத்த தீவான மார்ட்டினிக்கில் நங்கூரம் பாய்ச்சி மாலுமிகள் அங்கே மூன்று நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். இந்த மூன்று நாட்களும் ஆள் தின்னும் கரீபியர்களின் தொந்தரவில்லாமல் இருந்தது.

ஜூன் 29-ம் நாள் அவன் கப்பல்கள் சாண்டா டோமிங்கோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. சாண்டா டோமிங்கோவிற்குப் போகக் கூடாதென்று அரசரும் அரசியாரும் அவனை மிகவும் எச்சரித்திருந்தார்கள். அங்கு சென்றால் அவனுக்கும் ஓவாண்டோவுக்கும் தகராறு ஏற்படக் கூடும் என்று எதிர்பார்த்தார்கள்.