பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

னின்று மீண்டிருக்க முடியாது. காற்றோ தொடர்ந்து கீழ்த்திசையிலிருந்து அடித்துக் கொண்டிருந்தது. கடல் நீரோட்டமோ மேல் திசையிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. பகலிற் போலவே இரவிலும் கப்பல்கள் மேலும் கீழுமாக அல்லாடிக் கொண்டிருந்தன. யாரும் தூங்க முடியாது. மேலும், படையெடுத்து வந்த கொசுக்களோடு வேறு போராட வேண்டியிருந்தது. கப்பல்கள் ஓரேயிடத்தில் நின்றாலும் ஆபத்தாயிருந்தது; நிற்காமல் சென்றாலும் ஆபத்தாயிருந்தது. ஒரு நாள் சென்ற திசையில் மறுநாள் செல்ல முடியாமலிருந்தது. போன திசையிலிருந்து புறப்பட்ட இடத்திற்கே சில சமயம் திரும்பி வர நேர்ந்தது. எப்படி எப்படியோ சமாளித்து செப்டம்பர் 14:ம் நாள் ஒரு முனையை அடைந்து அத்தீவின் தென்கரைப் பக்கமாகக் கப்பல்களை ஒதுக்கிக் காற்றின் கொடுமைக்குத் தப்பிவிட்டார்கள். நிகாரகுலா என்ற இடத்தில் தண்ணீரும் விறகும் ஏற்றுவதற்காகக் கப்பல்களை நிறுத்தினான். அங்கு இரண்டு மாலுமிகள் ஆற்றில் வீழ்ந்து மூழ்கிப் போனார்கள். அங்கிருந்து கோஸ்டாரிக்காவை அடைந்தார்கள்.

கோஸ்டாரிக்காப் பகுதியைச் சேர்ந்த உவாத்தீவில் இந்தியர்களிடம் சிறிது வாணிபம் நடந்தது. அந்தத் தீவை ஸ்பெயினுக்கு உரிமைப்படுத்தும் சடங்கைச் செய்வதற்காக பார்த்தலோமியோ கொலம்பஸ், கரைக்குச் சென்றான். தாள். இறகு பேனா, மைக்கூடு ஆகியவற்றுடன் சென்ற மாலுமிகளை மந்திரவாதிகள், என்றும், அவர்களுடைய எழுது கருவிகளை மாந்திரீகக் கருவிகள் என்றும் எண்ணிப் பயந்தார்கள் அந்த இந்தியர்கள்.

இப்பகுதியின் உள்நாட்டுப் பகுதியை ஆராய்வதற்காக ஆயுதந் தாங்கிய ஒரு குழுவை அனுப்பி வைத்தான்