பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

கைச்சாடை மூலம் ஏதேனும் கடற்கால்வாய் இருக்கிறதா என்று இந்தியர்களைக் கேட்டதற்கு, அவர்கள் ஒரு சிறு கால்வாயிருந்த திசையைக் காட்டினார்கள். மிகக் குறுகிய அதன் வழியாகக் கால்வாய்கள் சென்று கடைசியில் ஒரு கடல் ஏரியை யடைந்தன. இந்திய மாக்கடலை யடைவதற்குப் பதிலாக, சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இந்த ஏரியையடைந்து ஏமாந்தான் கொலம்பஸ். இங்கும் தங்க வளைய வாணிகம் நன்றாக நடந்தது.

சைகை மொழியைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், இந்தியர்களுடன் பேசிய கொலம்பஸ், கங்கையாறு அங்கிருந்து பத்து நாள் பயணத்தில் தான் இருக்கிறதென்று கற்பனை செய்துகொண்டான்.

பல இடங்களைச் சுற்றிக்கொண்டு நவம்பர் 2-ம் நாள் போர்ட்டோ பெல்லோ துறைமுகத்தை யடைந்தான். இத் துறைமுகம் மிக அழகானது. இங்கு தங்கம் கிடைக்காததால் கொலம்பஸ் தங்கவில்லை. கொலம்பஸ் இங்கு சில நாள் தங்கியிருந்திருந்தால் பனாமாக் கடல் கால்வாயைக் கண்டுபிடித்திருப்பான். ஆனால், பொன்னில்லா ஊரில் பொறுத்திருக்க வேண்டாம் என்று ஒரு வாரத்தோடு புறப்பட்டு விட்டான்.

எஸ்கிரிபானோ என்ற சிறு துறைமுகத்தில் இறங்கிய மாலுமிகள், ஊருக்குள் சென்று துப்பாக்கியின் உதவியால் சில இந்தியர்களை மிரட்டிப் பொருள்களைப் பறித்துக் கொண்டு வந்தனர். இது பேராபத்தாக முடிந்தது. இந்தியர்கள் பெரும்படையாகத் திரண்டு கடற்கரைக்கு வந்து விட்டார்கள். அவர்களைக் கலைப்பதற்காக துப்பாக்கியால் சுட்டுச் சிலரைக் கொல்லும்படி நேர்ந்தது.