பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

உள்ள செயின்ட் ஆன் விரிகுடாவில் உள்ள சாண்டா குளோரியாவை அந்தக் கப்பல்கள் அடைந்தன. ஓட்டையாக இருந்த அந்தக் கப்பல்களை நீரில் விட்டு வைப்பது பயனில்லை என்று கண்ட கொலம்பஸ் அவற்றைக் கடற்கரை மணற்பகுதியில் கரை தட்டச் செய்தான். அவற்றை ஒன்றன் அருகில் ஒன்றாக முட்டுக் கொடுத்து நேராக நிற்க வைத்து, அக்கப்பல்களின் மேலேயே ஓலை வேய்ந்து, ஆட்கள் தங்குவதற்கு அறைகள் அமைத்தான்.

ஏறக்குறைய அங்கு அவர்கள் ஓராண்டு காலம் தங்கி யிருந்தார்கள். அருகில் இருந்த சிற்றூரில் இருந்த இந்தியர்கள் நட்பு முறையில் பழகினார்கள். தன் ஆட்களைக் கரையில் விட்டால், விரைவில் அந்த நட்பைப் போக்கிப் பகைமை வளர்த்துவிடுவார்கள் என்று கண்ட கொலம்பஸ் தன் அனுமதியில்லாமல் யாரும் கப்பல்களை விட்டுப் போகக் கூடாதென்று கட்டளையிட்டுவிட்டான்.

ஓராண்டாக அங்கு தங்கிய ஸ்பானியர்கள் தங்கள் தேவையைத் தாங்களே நிறைவேற்றிக் கொள்ளச் சிறிதும் முயலவே இல்லை. நிலவளமிகுந்த அந்தப் பகுதியில் உணவுத் தானியங்களைப் பயிரிட்டிருக்கலாம். மீன் பிடித்திருக்கலாம். அதெல்லாம் செய்யவில்லை.

டீகோ மெண்டஸ் என்ற கப்பல் தலைவன் உணவு பெறுவதற்காக இந்தியர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இரண்டு பாசி மணிகளுக்கு ஒரு கசாவா ரொட்டித் துண்டும், சரிகைத் துண்டு ஒன்றுக்கு ஒரு பெரிய குழி முயலும் கொடுக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டான். இந்தியர்கள் மட்டும் உணவு கொடுக்காமல் இருந்திருந்தால், ஸ்பானியர்கள் பட்டினி கிடந்தே செத்துப் போயிருக்க நேரிட்டிருக்கும்.