பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

கடைசிநேரத்தில், தன் தாயின் அரசுரிமையைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதற்காக ஜூலானா இளவரசி ஸ்பெயினுக்கு வந்திருந்தாள். தாய் அளித்த சலுகையை மகள் அளிப்பாள் என்ற நம்பிக்கையோடு அவளைக் கண்டு பேசி வரத் தன் சகோதரன் பார்த்தலோமியோவை அனுப்பி வைத்தான் கொலம்பஸ்.

பார்த்தலோமியோ புறப்பட்டுச் சென்ற பின் கொலம்பஸ் உடல் மிகத் தளர்ச்சியுற்றது. 1506 ம் ஆண்டு மே மாதம் 19 ம் நாள் அவன் தன் கடைசி உயிலை எழுதிவைத்தான். தன் மகன் டோன் டீகோவைத் தன் நேர் வாரிசாகக் கொண்டு மற்ற உறவினர்களுக்கும் சிலச்சில உரிமைகளைக் கொடுத்து அந்த உயிலை எழுதி வைத்தான். உயில் எழுதிய மறுநாள் திடீரென்று உடல் நிலை கவலைக்கிடமாயிற்று. மதகுரு ஒருவர் அழைத்துவரப்பட்டார். கொலம்பசின் மகன்கள் இருவரும் தம்பி டீகோவும் மெண்டஸ், பீச்சி போன்ற நண்பர்களும் மற்றும் சில நண்பர்களும் உறவினர்களும் படுக்கையைச் சுற்றி நின்று இறை வணக்கம் செய்தார்கள்.

"ஆண்டவனே, உன் கைகளிலே என் ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று சேசுநாதர் கூறிய அதே சொற்களைத் தன் சொல்லாகக் கூறி கொலம்பஸ் உயிர் நீத்தான்.

ஓர் அரசப்பிரதிநிதிக்கு, மிகப்பெரிய சிறப்புக்குரிய பெருங் கடல்தளபதிக்கு உரிய முறையில் அவன் ஈமச் சடங்குகள் செய்யப்படவில்லை. மிகமிக எளிமையான முறையில் யாரோ மூலையில் கிடப்பவனுக்குச் செய்வது போல் அச்சடங்குகள் செய்யப்பெற்றன.

அவன் இருந்த போதோ, இறந்த போதோ யாரும் அவனுடைய பெருமையை உணரவில்லை. சொல்லப்