பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. அப்போதிருந்த வசதி வாய்ப்பு ஆகியவற்றிற்குத் தகுந்தாற்போல் கண்டுபிடிக்கப் பட்ட செய்திகளை வைத்துக்கொண்டு, இப்படி யிருக்கலாம் அப்படி யிருக்கலாம் என்ற அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டே கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

கொலம்பஸ் அக்காலத்தில் கிடைத்த பூகோள நூல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்திருந்தான். தான் படித்த நூல்களைக் கொண்டு – அவை கூறும் கருத்துக்களைக் கொண்டு அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். வட்ட வடிவமான இந்த உலகத்தில் நிலப்பகுதியைச் சுற்றிலும் கடற்பகுதி சூழ்ந்திருக்கிறது; கடலின் இடையிலே இந்த நிலப்பகுதி ஒரு பெரிய தீவுபோல அமைந்திருக்கிறது; இதில் நிலப்பகுதி ஏழு பாகமும் கடற்பகுதி ஒரு பாகமுமாக அமைந்துள்ளன என்று அவன் நம்பினான். எனவே கடல் வழியாக மேற்கு நோக்கிப் புறப்பட்டால் மிக எளிதாகக் கீழை நாடுகளையடைந்து விடலாம் என்று அவன் திண்ணமாக நம்பினான். உண்மையில் உலகின் மொத்தப் பரப்பில் ஏறக்குறைய முக்கால் பங்கு கடல் சூழ்ந்திருக்கிறது. இது கொலம்பசுக்கு அக்காலத்தில் தெரிந்திராதது அதிசயமில்லை.

கீழ்நாடுகளுக்குக் கடல் வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று மேல் நாட்டார் விரும்பக் காரணம் என்ன? எல்லாம் ஆசைதான்; பேராசைதான்!

கீழ் நாட்டுப் பொருள்களுக்கு மேல் நாடுகளிலே அதிக மதிப்பிருந்தது. தங்கமும் வெள்ளியும், முத்தும் இரத்தினமும், பட்டும் பருத்தியும், வாசனைப் பொருள்களும், மருந்து மூலிகைகளும் சிறுசிறு அளவில் மேல் நாடுகளுக்குப் போய்ச் சேர்ந்தன. இவை யாவும், ஒட்டகங்களின் மேல் ஏற்றிச் செல்லப்பட்டு கான்ஸ்டாண்டி நோபிள் போய்ச் சேரும்,