பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

அந்தக் குழுவில் ஒரு முக்கியமான மதத் தலைவரும் இரண்டு யூத மருத்துவரும் இருந்தார்கள். அவர்கள் கப்பற் பயணங்களில் நல்ல அனுபவமும் திறமையும் பெற்றவர்கள். அவர்கள் கொலம்பசின் கூற்றை ஆராய்ந்து, அது நடை முறைக்கு ஒத்துவராதது என்று தள்ளிவிட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி பற்றிப் பலவிதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. கொலம்பஸ் பெரிய தற்பெருமை மிகுந்தவனாகவும், அளவு கடந்த வாய்ப் பேச்சுக்காரனாகவும் இருந்ததாலும், சிப்பாங்கோ தீவு என்று அக்காலத்து அழைக்கப்பெற்ற ஜப்பானைப் பற்றி அவன் கூறிய செய்திகள் கற்பனையில் மிஞ்சிய வருணனைகளாக இருந்ததாலும், அரசர் அவனைச் சிறிதும் மதிக்கவேயில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

கொலம்பஸ் தான் கண்டுபிடிக்கப் போகும் நாடுகளில் தனக்குப் பெரும் பங்கும், உரிமையையும், அதிகாரமும், பட்டமும் வேண்டும் என்று கேட்டான்; அவன் கேட்டது மிக அதிகமாக இருந்ததால் அரசர் ஜான் அவனுக்கு உதவியளிக்க மறுத்துவிட்டார் என்று சிலர் கருதுகிறார்கள். இந்தக் கருத்தே பெரும்பாலும் உண்மையாக இருக்கக் கூடும்.

ஏனெனில் அசோர்சுத் தீவுகளைப் போல் ஏதாவது ஒரு தீவுக் கூட்டத்தைக் கண்டுபிடிக்கக்கூடிய தன் கப்பல் தலைவனுக்கு ஒரு தீவை உரிமைப்படுத்திக் கொடுக்க அரசர் முன் வந்ததற்குச் சான்றுகள் இருக்கின்றன கொலம்பசுக்கு உதவி மறுத்த 1485-ஆம் ஆண்டிலேயே டூல்மோ, எஸ்டிரீட்டோ என்ற இரு போர்ச்சுகீசிய மாலுமிகளுக்கு அண்டிலாத் தீவைக் கண்டு பிடிக்க அனுமதியும் உதவியும் வழங்கியிருக்கிறார்.

எட்டாவது நூற்றாண்டில் மூர்ச் சண்டையில் தப்பிப் பிழைத்த அகதிகள் அண்டிலா என்ற தீவிலே போய்க்