கரை தெரிந்தது
அட்லாண்டிக் மாகடலில் முன் போய் வந்த அனுபவம் கொலம்பசுக்குத் துணையாக இருந்தது. மேற்கு நோக்கிச் சென்றால், நேராகக் கிழக்கையடையலாம் என்பது அவன் திட்டம் என்றாலும், கண்னை மூடிக் கொண்டு அவன் நேரே மேற்றிசை நோக்கித் தன் கப்பல்களைச் செலுத்தி விடவில்லை. ஏற்கனவே, ஆப்பிரிக்க நாடுகளுக்குக் கப்பல் மாலுமிகளில் ஒருவனாகப் போய் வந்திருந்த அவன், அவ்வழிகளில் உள்ள கடலின் தன்மையை நன்கு புரிந்து வைத்திருந்தான். முதலில் தெற்கு நோக்கிச் சென்று, அங்குள்ள கானரித் தீவுகளை அடைவதென்றும், கானரித் தீவுகளிலிருந்து வட மேற்காகத் திரும்பி, மீண்டும் மேல் திசையில் செல்வதென்றும் அவன் முடிவு செய்திருந்தான். கானரித் தீவுகளின் பக்கம் சென்று விட்டால், அங்கு எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் கீழ்க்காற்றுகள் அவன் மேல் திசை செல்வதற்கு உதவியாக இருக்கும்; அதுவுமல்லாமல் அந்தத் தீவுகளைச் சுற்றியுள்ள கடலின் நீர், ஆண்டில் பெரும்பகுதி கொந்தளிப்பின்றி குளத்து நீரைப் போல் அமைதியாக இருக்கும். அதுவுமல்லாமல் அந்த வழியில் இருப்பதாகக்