பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

களுக்கு ஸ்பெயின் மாமன்னர்கள், அது ஒரு மாதத்தில் திரும்பி வந்தாலும் இரண்டு மாதத்தில் திரும்பி வந்தாலும் எத்தனை நாளில் திரும்பி வந்தாலும் ஓர் ஆண்டுச் சம்பளம் கொடுப்பதாக வாக்களித்திருந்தார்கள். அந்த ஓர் ஆண்டுச் சம்பளம் தவிர, அத்தனை நாட்கள் துயரப்பட்டு முதல் முதல் அடையும் நிலப்பகுதியைக் கண்டு பிடிப்பதற்காக மேற் கொண்டு விசேஷ வெகுமதிப் பணமும் அதிகமாக வாங்கித் தருவதாகவும், எச்சரிக்கையாக இருந்து நிலப்பகுதி நெருங்குவதைக் கவனித்து வரும்படியும் ஒவ்வொருவருக்கும் உறுதி கூறினான் கொலம்பஸ். மற்ற கப்பல் தலைவர்கள் பாய்களை அவிழ்த்து விட்டுக் கப்பல்களை மெதுவாக செலுத்திக் கொண்டு போக வேண்டுமென்று எண்ணினார்கள். ஆனால். கொலம்பஸ் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அடையக் கூடிய நிலப்பகுதி மேலும் அதி தொலைவில் இருந்தால், பாய்களை அவிழ்ப்பதால் தாமதப்பட்டு விடக்கூடும் என்று எண்ணினான் அவன்.

அன்று இரவு நிலாத்தோன்ற நெடுநேரமாகியது. ஆனால் அந்த நிலவு அதியழகாகக் காட்சியளித்தது. கடல் கொந்தளிப்பாக இருந்தாலும், நம்பிக்கை ஏற்பட்டுவிட்ட அந்த உள்ளங்களுக்கு அந்த இரவே அழகு நிறைந்ததாகத் தோன்றியது. கரையை எப்போது காணலாம் என்று அந்த மூன்று கப்பல்களிலும் உள்ள ஒவ்வொருவரும் ஆவலும் துடிப்பும் கொண்டிருந்தார்கள். பிண்டா என்ற கப்பல் முன்னால் சென்று கொண்டிருந்தது. பின்னால் சுமார் அரை மைல் தூரத்தில் இடது பக்கத்திலும் வலது பக்கத்திலுமாக சாண்டா மேரியாவும் நைனாவும் சென்று கொண்டிருந்தன. அடிக்கொரு தடவை ஒவ்வொரு மாலுமியும் கப்பலின் மேல் தட்டுக்கு வந்து மேற்றிசையிலே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். கரையை எவன் முதலில் கண்டு சொல்கிறானோ அவனுக்கு விசேஷ வெகுமதி ஏதாவது நிச்சயம் கிடைக்கும்.