பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அப்படியே அது ஜப்பானாக இல்லாவிட்டாலும் சீனாவைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

எனவே அவன் ஆறு சிவப்பு இந்தியர்களைத் துணைக்குக் கொண்டு மற்ற தீவுகளைக் கண்டுவரப் புறப்பட்டான். அக்டோபர் 14-ம் நாள் மற்றொரு தீவைக் கண்டு அதற்கு சாண்டா மாரியா என்று பெயரிட்டான். அந்தத் தீவு மக்களும் சான்சால்வடாரில் உள்ளவர்களைப் போலவே யிருந்தார்கள்.

கடல் தளபதி வெகுமதியாய்க் கொடுத்த சிவப்புக் குல்லாக்களும், பாசிகளும், வல்லூறு மணிகளும் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தன. சில இடங்களில் டாயினோ என்ற இனத்தவர்களாகிய இந்தச் சிவப்பு இந்தியர்கள், கொலம்பசின் கப்பலைச் சூழ்ந்து கொண்டு, "சக் சக் சக் சக்" என்று கூச்சலிட்டுக் கேட்டார்கள். "வல்லூறு மணி மேலும் வேண்டும்" என்பதற்குத் தான் இந்தக் கூச்சல்! வல்லூறு மணி என்பவை சின்னஞ்சிறிய மணிகளாகும். இவற்றில் ஒன்றை வளர்க்கும் பறவையின் கழுத்தில் அல்லது காலில் கட்டி விட்டுவிட்டால், அது வானில் பறக்கும் போது மணியடித்துக் கொண்டே போகும். மெல்லிய இந்த மணியோசை காதுக்கு மிக இனிமையாயிருக்கும். இந்த மணியையும், பாசியையும் குல்லாவையும் கொடுத்துத்தான், வெள்ளையர்கள் பிற நாடுகளிலிருந்து பல அரும் பொருள்களை அந்நாளில் கைப்பற்றிக் கொண்டு சென்றார்கள்.

தனக்கு வழி காட்டிய ஆறு டாயினோக்களையும் கொலம்பஸ் அடிக்கொரு தடவை "தங்கம் எங்கேயிருக்கிறது?" என்று கேட்டான். அவர்கள் தங்கள் நாடு முழுவதையும் கொலம்பசுக்குக் காட்டிவிட எண்ணினார்களோ, அல்லது அவனைத் திருப்திப்படுத்த எண்ணினார்-