பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தார்கள். ஆனால் அது சாப்பிடக்கூடாத கிழங்காகத் தோன்றியது. ஆகவே அதை அவர்கள் சேகரித்துக் கொள்ளவில்லை.

எதையெதையோ கண்டெடுத்து அவன் இந்தியாவிலும் ஆசியாவிலும் கிடைக்கும் பொருள்கள் தாம் என்று மனச் சமாதானம் அடைய முடிந்தது. ஆனால் தங்கம் மட்டும் அவன் கண்ணில் அகப்படவேயில்லை. அந்த டாயினோக்கள் எப்போதும் வேறு ஓர் இடத்தையே தங்கம் கிடைக்கும் இடமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை பாபேக்கு என்ற தீவில் மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டு தங்கம் தேடி எடுப்பார்கள் என்றும் பிறகு அதைச் சுத்தியால் அடித்துக் கட்டியாக்குவார்கள் என்றும் சிவப்பு இந்தியர்கள் கூறினார்கள். இதை கேட்டு பிண்டா கப்பல் தலைவன் அலோன் சோபின்சோன் கொலம்பசிடம் அனுமதி வாங்காமலே அந்த பாபேக்குத் தீவைத் தேடிக்கொண்டு கப்பலைச் செலுத்திச் சென்று விட்டான். அங்கு போன பிறகுதான் மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டும் தங்கம் எடுக்கவில்லை; தீவட்டி வைத்துக் கொண்டும் எடுக்கவில்லை என்று தெரிந்தது.

கொலம்பஸ் ஒரு நாளும் சும்மா இருக்கவில்லை. சிவப்பு இந்தியர்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு புதுப் புது இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்தான். கடைசியாக சான் நிகோலஸ் துறைமுகத்தை யடைந்தான். அங்கு உண்மையிலேயே தங்கம் கிடைத்தது. அது இல்லாமல் அவன் ஸ்பெயினுக்குத் திரும்பியிருந்தால், அவன் எதையோ பார்த்துவிட்டு வந்து இந்தியா என்று சொல்லுகிறான் என்றல்லவா மக்கள் கேலி புரிவார்கள்!

அழகு பொருந்திய ஒரு தீவைக் கண்டு அதற்கு லா ஐலா எஸ்பனோலா என்று பெயரிட்டான் கொலம்பஸ்.